(பிறவ்ஸ்)
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பதவியில் செய்திருக்கின்ற மாற்றம் மிகவும் தற்காலிகமானது. இந்த மாற்றம் என்னைக் காப்பாற்றுவதற்காக செய்யப்பட்ட ஒன்றல்ல. மாறாக கட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த மாற்றத்தை கட்டாயம் செய்யவேண்டிய தேவையேற்பட்டது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சனிக்கிழமை கண்டி ஓக்ரே ஹோட்டலில் நடைபெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தெழுச்சி செயலமர்வு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;
நாட்டின் பிரதான கட்சிகளான சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் தேசியவாதம் வேரூண்றியிருக்கும் கிழக்கு மாகாணத்தில் கால்பதிப்பது மிகவும் சவாலான விடயமாகும். இந்தக் கட்சிகளில் தொங்கிக்கொண்டு செல்வதற்கு சிலர் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். இதில் பழைய பிரமுகர்களையும் உள்வாங்குவதற்கு முயற்சிக்கலாம்.
இப்படியான பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் தேசியப்பட்டியல் வழங்கப்படாமையாகும். கட்சியிடம் இருக்கின்ற இரண்டு தேசியப்பட்டியலை இருவருக்கும் கொடுத்துவிட்டால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தெழுச்சி செயலமர்வு சனிக்கிழமை (25) கண்டி ஓக் ரே ஹோட்டலில் நடைபெற்றது. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடளாவிய ரீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் என 160க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.