News Update :

Monday, February 6, 2017

TamilLetter

சசிகலா பதவியேற்பதில் குழப்பம்: -விபரம் உள்ளே


சென்னை: அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சசிகலா நடராஜன் முதல்வராக பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பதவியேற்பு விழா இன்று நடத்த திட்டமிட்டிருந்தனர்.  இந்த விழாவில், 32 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் கவர்னர் வருவது உறுதியாகததால் பதவி ஏற்பதை அறிவிக்க முடியாமல் அதிமுக தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் பதவி ஏற்புக்கு தடை கேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவே, தமிழக முதல்வராகவும் பதவியேற்க வேண்டும் என்று அக்கட்சியின் அமைச்சர்கள், எம்பிக்கள் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால், ஜெயலலிதா இறந்து 60 நாட்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் தொடர்ந்து இருந்து வந்தார். இந்நிலையில், திடீரென நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்தார். முன்னதாக, அன்றைய தினம் காலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மூத்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூட்டம் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்றது.
இதில் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி ஓ.பன்னீர்செல்வத்திடம் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு, அங்கிருந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பிற்பகல் 2.45 மணிக்கு தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், `எனது தனிப்பட்ட காரணத்திற்காக ராஜினாமா செய்கிறேன்’’ என்று ஓ.பன்னீர்செல்வம் தமிழக கவர்னருக்கும் கடிதம் அனுப்பி வைத்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தமிழக கவர்னர், புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும்படி பொறுப்பில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா வருகிற 9ம் தேதி நடைபெறும் என்றுதான் முதலில் தகவல் வெளியானது. ஆனால், நேற்று சசிகலா மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று அறிவித்தது. மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் முதல்வராக பதவியேற்க கூடாது என்ற கருத்தையும் பலர் வலியுறுத்தினர். இதனால், சசிகலா பதவியேற்பதை  எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்று தடை வாங்கலாம் என்றும் சசிகலா தரப்பினர் அஞ்சினர்.

உச்ச நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அதன் தலைவர் செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் தாக்கல் செய்த மேல் முறையீ–்ட்டு மனுவை விசாரித்த கர்நாடக நீதிமன்றம் அவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கபட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன் பிறகு அதிமுகவில் பல்வேறு அரசியல் விளையாட்டுகள் அரங்கேறின. இதையடுத்து சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் சசிகலா, முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அதற்காக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துள்ளார். இந்நிலையில், உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ள சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பல்வேறு தவகல்கள் வெளிவந்துள்ளன. நீதியை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக புரளிகள் உலவுகின்றன. விசாரணை முடிந்த நிலையில் ஒரு வழக்கின் தீர்ப்பை நீண்ட நாட்கள் தள்ளி வைப்பதால்தான் இது போன்ற புரளிகளும், நீதித்துறைக்கு எதிரான கருத்துகளும் எழுகின்றன.

இந்நிலையில் இந்த வழக்கில் ஒரு வாரத்துக்குள் தீர்ப்பளிக்க உள்ளதாக வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது. இதே வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது பொதுமக்களுக்கு அதிமுக தொண்டர்களால் கடுமையான தொந்தரவு தரப்பட்டது. அதற்கு முன்பு பிளசெண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட போது தர்மபுரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கல்லூரிப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. அதில் 3 மாணவியர் சிக்கி மரணமடைந்தனர். அதேபோல சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்தேறின. தற்போது தீர்ப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா முதல்வராக பதிவியேற்றபின், வழக்கில் அவருக்கு எதிர்மறையான தீர்ப்பு வந்தால் மீண்டும் அதிமுகவினரால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது.

எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அவசர அவசரமாக, 7ம் தேதியே (இன்று) சசிகலா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்க முடிவு செய்து, உடனடியாக அதற்கான பணிகளில் ஈடுபடும்படி தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு நேற்று காலை உத்தரவிடப்பட்டது. இதன்படி, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி மற்றும் அதிகாரிகள் சென்னை பல்கலைக்கழகம் சென்று அங்குள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தை ஆய்வு செய்தனர். அங்கேயே பதவியேற்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜும் சென்னை பல்கலைக்கழகம் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதையடுத்து சசிகலா முதல்வர் பதவியேற்பதற்கான விழா ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவே விழா நடைபெறும் மண்டபம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.தற்போது தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் டெல்லியில் உள்ளார். அவர் இன்று சென்னை வந்ததும், சசிகலா மற்றும் அதிமுக முன்னணி தலைவர்கள் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை காண்பித்து, தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி சசிகலா உரிமை கோருவார். இதை ஏற்றுக்கொண்டு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், சசிகலா தலைமையில் தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பார். அப்போது, தமிழகத்தின் புதிய அமைச்சர்கள் பட்டியலையும் சசிகலா கவர்னரிடம் வழங்குவார்.

இதைத்தொடர்ந்து,  சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக முதல்வராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து, 32 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக சசிகலா எப்போது பதவியேற்பார், எத்தனை மணிக்கு பதவியேற்பார், தமிழக கவர்னர் சென்னைக்கு எப்போது வருவார், சசிகலா முதல்வராக பதவியேற்கும் விஷயத்தில் கவர்னர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பது உள்ளிட்ட எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எல்லாமே ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் சிறப்பு விமானத்தில் சென்னை வரும்படி தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் இன்று அதிகாலை அவர் வந்தால் காலை 8.40 மணிக்கு பதவி ஏற்பு நடைபெறும். அல்லது மாலையில் பதவி ஏற்பு நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால்  கவர்னர் வருகை குறித்து உறுதி செய்யப்படாததால் பதவியேற்பையும் உறுதிப்படுத்த முடியாமல் அதிகாரிகளும், அதிமுக வினரும் குழப்பத்தில் உள்ளனர். கவர்னர் வருகை எப்போது என்பது நேற்று நள்ளிரவு வரை உறுதிப்படுத்தப் படாததால் பாஜ மீது அதி முக தலைவர் கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாதுகாப்பு திடீர் வாபஸ்
சசிகலா முதல்வராக  பதவியேற்க இருந்த சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று இரவு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டது. சென்னை அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கும் விழாவுக்கு வர வேண்டாம். மீண்டும் தகவல் தெரிவிக்கும் போது வாருங்கள் என்று அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து அறிவிக்கப்பட்டது. இதனால் சசிகலாவை வரவேற்க செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை சென்னை அதிமுகவினர் கைவிட்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-