சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருகை தந்தார். அவரை நேரில் சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம், தம்முடைய ராஜினாமாவை கட்டாயப்படுத்தி வாங்கினார் சசிகலா சட்டப் பேரவையில் தாம் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்த சசிகலா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அத்துடன் தம்மை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் விவரங்களையும் ஆளுநர் வித்யாசகரிடம் அளித்தார்.
இதையடுத்து இருதரப்பு விவரங்களையும் சேகரித்து மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையின் நகல் குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ஆளுநர் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உரிய ஆலோசனைக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.