News Update :

Thursday, February 9, 2017

TamilLetter

தடை உத்தரவு: டிரம்பிற்கு அடிமேல் அடி!


ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையமுடியாது என  நிர்வாக ஆணையை பிறப்பித்த விவகாரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அடிமேல் அடி விழுந்த வண்ணம் உள்ளது.
பயணத் தடையை ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் அதிபர் டிரம்ப். நீதிமன்றம் தம்முடைய ஆணைக்கு எதிராக அளித்திருந்த அந்தத் தீர்ப்பை தள்ளுபடி செய்யுமாறு அவர் விடுத்த கோரிக்கையை அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
கீழ் நீதிமன்றம் அதிபரின் ஆணைக்கு எதிராக விதித்த தடை உத்தரவை அகற்ற முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிபர் விதித்த பயணத் தடையை நியாயப்படுத்தும் வகையில், அமெரிக்கா எதிர்கொள்ளும் தீவிரவாதங்கள் பற்றி அரசுத் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது என்று மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் 3 நீதிபதிகளும் ஒருமனதாக அறிவித்துள்ளனர்.
"இந்த நிர்வாக ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்பதற்கு அரசு எந்தவொரு சான்றுகளையும் அரசு வழங்கவில்லை" என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் குடிநுழைவுக் கொள்கையை உருவாக்குவது அதிபர் என்கிற ஒருவர்தான் என்கிற அரசு வாதத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், இதுவொரு அரசியல் முடிவு என்று சாடியுள்ளார்.
வெள்ளை மாளிகை சார்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுசெய்த நீதித்துறை வெளியிட்டுள்ள  தனது அறிக்கையில், இந்தத் தீர்ப்பை ஆராய்ந்த பின்னர், மாற்று வழிகளை கண்டறியப் போவதாக குறிப்பிட்டுள்ளது. அடுத்து இந்த வழக்கை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-