தம்மை நிர்பந்தப்படுத்திதான் ராஜினாமா செய்ய வைத்தார்கள் என ஒபிஎஸ் கூறியதைத் தொடர்ந்து, அவரைப் பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளரான சசிகலா அறிவித்திருந்தார்.
எனினும், சற்றும் சளைக்காமல், சசிகலாவிற்கு எதிராக மல்லுக்கு நிற்கும் ஒ.பன்னீர்செல்வம், தம்மைப் பொருளாளரான ஜெயலலிதா நியமித்த பதவியிலிருந்து யாராலும் நீக்க முடியாது எனக் கூறியுள்ளார். மேலும், கட்சியின் பொருளாளர் என்ற வகையில், அதிமுக-வின் கணக்கு உள்ள வங்கிகளுக்கு நேற்று கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர், அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும். தற்போது தானே கட்சியின் பொருளாளர் என்றும் தமது ஒப்புதலின்றி அதிமுக வங்கிக் கணக்குகளை இயக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
இது குறித்து கருத்துரைத்துள்ள பேங்க் ஆப் இந்தியா முதன்மை மேலாளர் பி.கே சிங், தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"அதிமுக பொருளாளர் பன்னீர் செல்வம் எழுதிய கடிதம் தமக்கு இன்னும் வரவில்லை. கடிதம் கிடைத்ததும், வங்கிக்கணக்கு முடக்கி வைக்கப்படும்" என கூறியுள்ளார்.