உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஜூலை மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்காக சுயாதீன எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு ஆகிய தரப்புகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று வியாழக்கிழமை இடம்பெற உள்ளது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
எல்லை நிர்ணய அறிக்கையின் குறைபாடுகளே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதத்துக்கு காரணமே தவிர, எதிரணி கூறுவது போன்று அச்சத்தால் அல்ல. அவர்களுக்கு அரசியல் மேடை தேவை என்பது போல் எமக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் குறைபாடுகளை நிவ ர்த்தி செய்யாது வர்த்தமானியை வெளியிட முடியாது. பாரிய குறைகள் கிடையாது. அவற்றை நிவ ர்த்தி செய்வதற்கான சந்திப்பு இன்று முற்பகல் சுயாதீன எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு இடையில் முன்னெடுக்கப்பட உள்ளது.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிசுடன் காணப்பட்ட சிறு கருத்து முரண்பாடுகள் தற்போது நிவர்த்தியாகியுள்ள நிலையில் இன்று பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. எவ்வாறாயினும் ஜூலை மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் அளவில் முழுமையான வர்த்தமானியை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்கள் இது குறித்து மேலும் கலந்துரையாட உள்ளனர். எமக்கு எதிராக எதிரணியின் பிரசாரங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என தெரிவித்தார்.