ரம்புத்தானில், சுமார் 100 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு ஒன்று, இந்தோனிசிய தொழிலாளி ஒருவரை சுற்றி வளைத்து நெறித்துக் கொன்றது.
ஜாபோரிலுள்ள தம்முடைய நண்பர் ஒருவரைப் பார்த்து விட்டு 49 வயதுடைய சஃபார் என்ற அந்தச் இந்தோனிசியர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த மலைப் பாம்பை பார்த்து மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாகத் தெரிகிறது.
சாலையில் ஊர்ந்து கொண்டிருந்த அந்தப் பாம்பைப் பிடிக்க அவர் முயன்றிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. எனினும், மூர்க்கமடைந்த அந்தப் பாம்பு, சஃபாரை சுற்றிக் கொண்டது. தனது பிடியை விடாமல் அந்தம் பாம்பு இறுக்கியதாக தெரிகிறது. உடல் முழுவதும் சுற்றிக்கொண்டநிலையில் அவரால் தப்பிக்கவே முடியாமல் போனது.
இறுதியில் பாம்பு அவரை நெறித்துக் கொன்று விட்டது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த முகமட் யாசிட் என்பவர் இது பற்றிக் கூறியபோது, தாம் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது உதவி கோரி ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்டதாகக் கூறினார்.
அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தேன். மலைப்பாம்பு அந்த நபரை காலில் இருந்து கழுத்து வரை அப்படியே சுருள் போல சுற்றிப்பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். என்னுடன் வந்திருந்த என் மனைவியும் நானும் அவரை விடுவிக்க முயன்றோம். ஆனால், பாம்பு ஆவேசமடைந்தால் நெருங்க முடியவில்லை என்று 30 வயதுடைய முகமட் யாஷிட் சொன்னார்.
பின்னர், என்னுடைய மனைவி அருகிலிருந்த கம்பத்திற்கு ஓடிச் சென்று அங்குள்ளவர்களின் உதவியக் கோரினார். அவர்கள் வந்து பாம்பை வேட்டி வரை மீட்பதற்குள் பாம்பின் பிடியில் சிக்கிய அந்த நபர் இறந்து போனார் என்று முகமட் யாஷிட் சொன்னார்.
இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதை கெமாமான் மாவட்ட போலீஸ் படைத்தலைவர் முகமட் சையட் இப்ராகிம் உறுதிப்படுத்தினார். இறந்தவரின் உடல் பின்னர் கெமாமான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.