உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளுள் சுமார் பன்னிரண்டு மணிநேரம் சிக்கியிருந்த மூன்று வயதுக் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டும் உள்ளது.
கான்பூரின் ஜாஜ்மோ பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆறு மாடிக் கட்டடம் ஒன்று நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதன்போது கட்டடத்தினுள் பணியாளர்கள் சுமார் முப்பது பேர் இருந்ததாகவும் தெரியவருகிறது.
பலவீனமான அத்திவாரத்துடன் அமைக்கப்பட்டு வந்த இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு, கான்பூர் அபிவிருத்தி அதிகார சபை மூன்று முறை அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. என்றபோதும், கட்டடத்தின் உரிமையாளர் ஆலம், கான்பூர் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் என்பதால் அந்த அறிவித்தல்கள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன.
கட்டடம் இடிந்து விழுந்ததை அறிந்த ஆலம் தன் குடும்பத்தினருடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.