மட்டக்களப்பு மாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டின் பின்னர் 1802 பேர் எல்.ரி.ரி.ஈயினரால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக பத்ம உதயசாந்த குணசேகர எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 14 பேர் புலிகளால் கொல்லப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்.ரி.ரி.ஈயினரால் 1802 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 589 சிங்களவர்களும் 1025 தமிழர்களும் 188 முஸ்லிம்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இருவரும், ஈ.பி.டி.பி, ரி.என்.வி.பி, ரெலோ ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா இருவரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த ஆறு பேரும் உள்ளடங்குவதாக அமைச்சர் பதில் வழங்கினார்.
இதேநேரம், இந்த படுகொலைகள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க முடியும். எனினும் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று சுமார் 10 வருடத்துக்கு மேற்பட்ட காலம் கடந்திருப்பதால் முழுமையான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.