News Update :

Saturday, January 21, 2017

TamilLetter

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்- கலாநிதி.எஸ்.ஐ.கீதபொன்கலன்
டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளியன்று (ஜனவரி 20) அமெரிக்காவின் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அமைச்சரவை மற்றும் ஏனைய உயர் நிருவாகப் பதவிகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது அரசாங்கம் ஒரு வடிவத்தை எடுத்து வருகிறது. நல்லதுக்கோ அல்லது கெட்டதுக்கோ டொனால்ட் ட்ரம்ப் ஒரு வரலாற்று பெருமை கொண்ட மனிதராகிவிட்டார், சர்வதேச ரீதியாக அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஒவ்வாரு நாட்டிலும் இல்லாவிட்டால் ஒவ்வொரு நபரிடத்திலும் ஒரு வழியிலோ அல்லது வேறு வழிகளிலோ ட்ரம்பின் கொள்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.அதனால் சிலர் இலாபம் அடையும் அதேவேளை மற்றும் சிலர் நட்டமும் அடைவார்கள். ஸ்ரீலங்காவும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அதிலும் தாக்கங்கள் இருக்கும்.
ட்ரம்ப்பின் சூத்திரம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் உறுதியான உடனேயே சிலர் அமெரிக்காவின் சூத்திரங்களை ஸ்ரீலங்காவில் பிரயோகி;க்க ஆரம்பித்தார்கள். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாயா ராஜபக்ஸவும் கூட ட்ரம்ப் வெற்றி பெற்றுவிட்டார் ஏனென்றால் அமெரிக்க மக்கள் தொழில் ரீதியான அரசியல்வாதிகளைப்பற்றி எச்சரிக்கையாகி விட்டார்கள் என்றும், ஸ்ரீலங்காவாசிகளும் கூட அரசியல் நிறுவனங்களுக்கு அப்பால் உள்ள தலைவர்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தார். கோட்டபாயா ராஜபக்ஸ ஒரு தொழில் ரீதியான அரசியல்வாதி அல்ல. அவரது ட்விட்டர் செய்தி ஒன்றில் கூட கோட்டபாயா  “நாங்கள் எங்கள் தேசத்தை திரும்பப் பெறுவோம்” என்று ட்ரம்பின் செய்திக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு செய்திகளும் ஆழமான அர்த்தத்தை கொண்டுள்ளன.
சில ஸ்ரீலங்கா அரசியல்வாதிகளுக்கு ட்ரம்பின் பாணியிலான தீவிர தேசியவாதத்தை ஸ்ரீலங்காவிலும் பரீட்சித்துப் பார்க்க ஆவலாக இருக்கலாம். மூலோபாய ரீதியாக ட்ரம்ப்  அநேகமாக அமெரிக்காவிலுள்ள அனைத்து சிறுபான்மை குழுக்களையும் இழிபடுத்தியும் குற்றம் சாட்டியும் வந்தபோதும் கணிசமானளவு வெற்றியும் பெற்றார். நாட்டிலுள்ள சனத்தொகை பரம்பல் விகிதத்தை கணக்கிட்டுப் பார்க்கும்போது அந்த சூத்திரம் ஸ்ரீலங்காவில் வேலை செய்யுமா என்பது சந்தேகம்தான். சிறுபான்மை இனத்தவர்கள் மீது அதிகளவு உயர்மட்ட பகைமையை பிரதிபலிக்கும்போதுதான், ஒரு தீவிர தேசியவாதி, ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வாக்குகளால் மட்டும் வெற்றி பெற முடியும். ஸ்ரீலங்காவில் ஒரு கட்சி அல்லது வசீகரத்  தன்மையுடன் மக்களை ஈர்க்கும் ஒரு தலைவர் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் 70 விகித சிங்கள வாக்குகளைப் பெறுவது என்பது கிட்டத்தட்ட அசாத்தியம். ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஸ்ரீலங்கா ட்ரம்ப்பின் சூத்திரத்தை 2015ல் முயற்சித்தது. அது வெற்றி பெறவில்லை.
உண்மையில் அமெரிக்காவில் கூட ட்ரம்ப்பின் சூத்திரம் வேலை செய்யவில்லை. தேசிய அளவில் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் அவர் தோல்வி அடைந்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று மில்லியன்  மக்கள் வாக்குகளை அவர் இழந்திருந்தார். அதிர்ஷ்ட வசமாக ஸ்ரீலங்காவில் மாநில பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை இல்லை.
ஜெனிவா தீர்மானம்
ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றி உடனடியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது அநேகமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திலாக இருக்கலாம், அது முதலில் கோரியுள்ளது, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்மீது ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று.
ஆரம்பத்தில் அமெரிக்கா எல்.ரீ.ரீ.ஈ உடனான இறுதிக்கட்ட போரின்போது ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியது மற்றும் பொதுமக்கள் மரணத்தைப் பற்றி பாராமுகமாக இருந்தது. எதிர்பாராத விதமாக ராஜபக்ஸ சீனாவின் பக்கம் திரும்பியதுடன் வாஷிங்டனை முற்றாக ஓரங்கட்டினார். இதற்கிடையில் ஒபாமா நிருவாகத்தின் ஆசியாவுக்கு முன்னிலை வழங்கும் ஆசையினால் ஸ்ரீலங்கா மேலதிக முக்கியத்துவம் பெற்றது. ஜெனிவாவில் அமெரிக்கா ஸ்ரீலங்கா (எதிரான?) மீதான பிரேரணைக்கு அனுசரணை வழங்கியதன் காரணமாக, ஸ்ரீலங்கா மீதான சில கட்டுப்பாடுகளை அமெரிக்கா தக்க வைத்துக்கொள்ள அது உதவியது. அதற்கு மேலதிகமாக ஹிலாரி கிளின்டனும் மனித உரிமைகள் பிரச்சினையில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக இந்த தீர்மானத்தை கொண்டுவருவதில் முக்கிய பங்களிப்பைச் செய்தார்.
இப்போது ஒபாமா நிருவாகமும் போய்விட்டது, ஹிலாரி கிளின்டனும் போய்விட்டார். ஒபாமாவின் சகாப்தம் முடிந்துவிட்டதின் அர்த்தம், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஆசியாவுக்கு வழங்கப்பட்ட மேலதிக முக்கியத்துவம் மறக்கடிக்கப் பட்டுவிடும் என்பதாகும். அமெரிக்கா திரும்பவும் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு முன்னிலை வழங்கும். ட்ரம்ப்புக்கு பரந்த உலகக் கண்ணோட்டம் கிடையாது. ஒரு ஜனாதிபதியாக அவர் தனது நலன்களை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலும் விரிவாக்கலாம். அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை ஏற்கனவே பெரிய அளவிற்கு எண்ணெயை மையப்படுத்தியதாக மாறிவிட்டது. வெளிநாட்டு கொள்கையில் எண்ணெய் காரணி, எக்ஸோன் மொபைல் எண்ணைய் மற்றும் வாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் மற்றும் முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான றெக்ஸ் ரில்லர்சன் அவர்களின் நியமனத்தால் மேலும் அதிகரித்து விட்டது. ஆகவே, ஒரு சிறிய மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யாத நாடாகிய ஸ்ரீலங்கா, ட்ரம்ப்பின் வெளிநாட்டு கொள்கைத் திட்டத்தில் எந்த இடத்திலும் தோற்றம் பெறும் சாத்தியமில்லை. ஆசியாவை பொறுத்தமட்டில் சீனா மற்றும் இந்தியா என்பன அதிக கவனத்தை ஈர்க்கும்.
ஹிலாரியை போலல்லாது, ட்ரப் நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் விஷயத்தில் பெரிய ரசிகர் கிடையாது. அவர் சித்திரவதையில் நம்பிக்கை கொண்டுள்ளார், அமெரிக்க வெளிநாட்டு கொள்கை மற்றும் ஊடக பாடங்களில் “ அதிகரிக்கப்பட்ட விசாரணை நுட்பங்கள்” என நாசூக்காக குறிப்பிடப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக தனது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பற்றி ட்ரம்ப் விளக்கியுள்ளார் அவர் ஐஎஸ்ஐஎஸ் மீது கற்காலத்தை போல குண்டுவீச தான் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை அவர் யுத்த வலயங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எதுவித அக்கறையும் தெரிவிக்கவில்லை. ஆகவே ட்ரம்ப், ஸ்ரீலங்காவின் இறுதிக்கட்ட போரின்போது நடந்தவைகளை ஏற்றுக்கொள்ள முடியாதவைகள் என்று கருதமாட்டார். ஜெனிவா தீர்மானம் அல்லது ஒரு சர்வதேச விசாரணைக்கான  கோரிக்கை என்பன ட்ரம்ப் நிருவாகத்தின் பின்துணையை கொண்டிருக்காது. மறுபக்கத்தில் இந்த தீர்மானத்தில் அமெரிக்காவுடன் இணைந்து வேலை செய்த ஐரோப்பிய நாடுகள் பலமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் கூட்டு சேர்வதிலேயே நம்பிக்கை கொள்வார்கள்.
ட்ரம்ப்புக்கு வலுவான தலைவர்கள் மீது ஒரு நாட்டம் உள்ளது. அவர் தொடர்ச்சியாக ஒபாமாவை ஒரு பலவீனமான தலைவர் என்று விமர்சித்ததுடன் ஜனாதிபதி புட்டின் மற்றும் கிம் ஜோங் அன் ஆகியோரை புகழ்ந்தும் வந்தார். அதனால் ஜனாதிபதி ராஜபக்ஸவின் அரசியல் மற்றும் கொள்கைகள் விமர்சனத்துக்கு தகுதியாவதைக் காட்டிலும் அவரைக் கவரவும் செய்யலாம். தற்போதைய அமெரிக்க அரசாங்கம் ராஜபக்ஸ அரசாங்கத்தை விமர்சிக்கும் அதேவேளை அது எவ்வாறு எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடித்தது என்பதனை கற்றுக்கொள்ளவும் முயற்சிக்கும் என நான் நம்புகிறேன். ஒரு சில தந்திரங்கள் மத்திய கிழக்கில் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும்போது அதைச் சமாளிக்க மேற்கத்தைய அரசாங்கங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். ட்ரம்ப் பாசாங்குத்தனத்தை கைவிட்டு ஸ்ரீலங்காவின் மோதல் தீர்மான மாதிரியை வெளிப்படையாகவே தழுவிக்கொள்ளலாம்.
எனவே ட்ரம்பின் ஏறுமுக நிலைக்கான சாத்தியக்கூறுகள் ஜெனிவா தீர்மானம் மற்றும் சர்வதேச விசாரணை என்பனவற்றின் மரணம் என்பதாகும். தற்பொழுது நடைபெற்றுவரும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய செயல்முறைக்கு இந்த இடத்தில் என்ன அர்த்தம் உள்ளது?
அரசியலமைப்பு சீர்திருத்தம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி விக்கிரமசிங்க ஆகியோர் இனமோதலுக்கு அரசியலமைப்பு சீர்திருத்தம் ஊடாக ஒரு தீர்வினைக் காண்பது முக்கியம் என வலியுறுத்தி வருகிறார்கள். எனினும் ஜெனிவா தீர்மானத்துக்கும் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என மதிப்பிடுவது அப்பாவித்தனமானது. இந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்னாலுள்ள வெளியே தெரிவிக்கப்படாத ஒரு இலக்கு சர்வதேச விசாரணைக்கான வேண்டுகோளைத் தணிப்பதே ஆகும். இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு அளவுக்கதிகமான ஆர்வம் கிடையாது. எல்லாம் மூலோபாய தந்திரங்கள். இந்த அரசாங்கம் 2015ல் பதவிக்கு வந்ததில் இருந்து ஜெனிவா தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்.
இப்போது ஜெனிவா நடவடிக்கை (அல்லது கோரிக்கை) முற்றாக மரணமடைவதை தொடர்ந்து அதற்கு கட்டாயமாக இருந்தவற்றுள் ஒன்றான அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளும் காணாமற் போய்விடும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சர்வதேச அழுத்தங்களை விலக்குவதற்கு அரசாங்கத்திற்கு திறமையான ஒரு சீர்திருத்த திட்டம் அவசியம் இல்லை. உள்ளுரிலும் கூட அரசாங்கத்திற்கு தீவிரமான அழுத்தங்கள் இருக்கப் போவதில்லை விசேடமாக தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருந்து. எனவே ஸ்ரீலங்காவில் அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது முற்றிலும் அரசாங்கம் மற்றும் சிங்கள மக்களின் நல்லெண்ணத்திலேயே தங்கியுள்ளது. இந்த உலகத்தில் இரக்க மனப்பான்மை கொண்ட பெரும்பான்மையினர் எங்காவது இருக்கின்றார்களா?
(கலாநிதி.எஸ்.ஐ.கீதபொன்கலன், மெரிலான்ட், சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின், மோதல் தீர்வுத் துறையின் தலைவராவார்)

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-