யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு நீதி கோரி இன்று கவனயீர்ப்புப் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 2 மணித்தியாலங்கள் இந்த கவனயீர்ப்புப் பேராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும், வர்த்தக நிலையங்களும் இரண்டு மணித்தியாலங்கள் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊர்காவற்துறை சந்தியில் கூடிய பொதுமக்கள் குறித்த பெண்ணுக்கு நீதி கோரி மனித சங்கிலி பேராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றை பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
4 வயது பெண் பிள்ளையின் தாயான, ந.கம்சிகா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருடைய வீட்டிற்குள் வைத்து தாக்கி, கொலை செய்யப்பட்டிருந்தார்.
பெண்ணின் தலையின் பின்புறம் பலமாக நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை கொலையுடன் தொடர்புடையதாகக் கூறி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த இருவரும் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.