முற்றிலும் தனிச்சையாக இயங்கக்கூடிய ரோபோ ஆயுதங்களைத் தயாரிக்கும்படி ரஷ்ய இராணுவ ஆயுதத் தயாரிப்புக் கூடங்களுக்கு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அதிபராகி இருக்கிறார். எதிர்காலம் எப்படிப் போகும் என்று சொல்லமுடியாது.. ரஷ்யா தனது ஆயுதப் பலத்தில் அதிரடி மாற்றங்களைக் செய்யவேண்டும். நமக்கு இயந்திர இராணுவ வீரர்கள் தேவை என்று அவர் அறிவித்திருக்கிறார்.
இராணுவ தொழில்துறை சார்ந்த அதிகாரிகளுடன் புடின் மிக முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தினார். எதிர்காலத்தில் இத்தகைய ரோபோ ஆயுத முறை அவசியமாகிறது. வருங்காலப் போர்கள் எத்தகைய முறையில், எப்படி அமையும் என்பதை துல்லியமாக கண்டறிந்து ரோபோ ஆயுதங்களை நாம் உருவாக்கவேண்டும் என்று அதிபர் புடின் வலியுறுத்தி இருக்கிறார்.
நமக்கு மட்டுமல்ல, அந்த அத்தகைய ஆயுதங்கள்... அவை அனைத்துலகச் சந்தையிலும் நம்மால் விற்கப்படவேண்டும். ஒட்டுமொத்தமாக பாரம்பரிய பாணி இராணுவம் மாற்றி அமைக்கப்படவேண்டும் என்றார் அவர்.
டொனால்ட் டிரம்ப் அதிபராவதற்கு முன்பு வரையில் கிழக்கு ஐரோப்பிய எல்லைப் பகுதிகளில் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் உரசல் கடுமையாகிக் கொண்டே இருந்தது. எனினும், டிரம்ப் அதிபரான பின்னர் அது தணியும் என்ற யூகம் நிலவினாலும் டிரம்ப் எப்போது, எப்படி மாறுவாரோ என்ற ஐயம் ரஷ்யாவுக்கு ஏற்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.