News Update :

Monday, January 9, 2017

TamilLetter

தேர்தலைத் தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை! - கைவிரித்தார் மஹிந்த




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேர்தல் ஆணையகம் இருந்தபோதும் அதனை நடைமுறைப்படுத்தக்கூடிய அதிகாரம் ஆணையத்திடம் இல்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி தலைவர் ஜீ.எல் பீரிஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்தக் கோரி தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தை நேற்று காலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளிக்கும்போதே ஆணையாளர் நாயகம் மேற்கண்டவாறு கூறி கைவிரித்தார்.

மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் சர்வசன வாக்கெடுப்பு பாதிக்கப்படகூடாது என்பதில் தேர்தல்கள் ஆணையகம் உறுதியாக இருக்கின்றது. இந்த உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துவதாகவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென்பதே அனைத்து அரசியல் கட்சிகளினதும் விருப்பமாகும். பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மட்டுமன்றி பல அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.எனினும் தேர்தல்கள் ஆணையகத்தினால் இது குறித்து எதுவுமே செய்ய இயலாது. இலங்கை அரசியலமைப்பின்படி சர்வசன வாக்ெகடுப்பினை நடத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திடமே வழங்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையகம் சுயாதீனமாக செயற்படுகின்றபோதும் தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் அதற்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, சித்திரைப் புத்தாண்டு மற்றும் வெசாக் பண்டிகைகளின்போது தமது தொகுதி மக்களுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும் என்ற அச்சத்திலேயே பல வேட்பாளர்கள் மார்ச் மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தம்மை வற்புறுத்தி வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-