பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் – சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆட்சியை விட்டோ டிய மகிந்த, நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை விமர்சிப்பது வேடிக்கையான செயலாகும் எனவும் வெட்டிப்பேச்சுக்களுக்கு அரசா ங்கம் அச்சமடையாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கொண்டாட்ட நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் உரையாற்றியுள்ளார்.
வடக்கு, தெற்கு பிரச்சினையைவிட இலங்கைக்கு பிராந்திய சர்வதேச மட்டத்தில் பாரிய பிரச்சினைகள் இருந்தன. சுதந்திரம், ஜனநாயகம் மனித உரிமைகள், ஊடகசுதந்திரம் உள்ளிட்டவை அச்சுறுத்தலை சந்தித்து இருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இரண்டு வருடங்களில் ஊடகவியலாளர்கள் எவரும் கொலை கொலை செய்யப்படவில்லை. நாட்டைவிட்டு வெளியேறவில்லை. ஊடகசுதந்திரம் அதிகமாக கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு வருடங்களில் அரசு என்ன செய்துள்ளது என கேள்வி கேட்கின்றனர். அவ்வாறு கூறுகின்றனவர்கள் 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை விட 18 ஆவது திருத்தசட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் நினைத்துப்பார்க்க வேண்டும்.
19 ஆவது சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை விட 18 ஆவது திருத்த சட்டம் நீக்கப்பட்டதே எமது பாரிய வெற்றியாகும்.
பொருளாதார ரீதியில் பிரச்சினைகளை முகம்கொடுக்கும்போது எமக்கு எதிராக விரல் நீட்டுகின்றனர். சட்டரீதியாக ஒப்பந்தங்கள் செய்யப்படாது தீர்மானங்கள் எட்டப்படாத அம்பாந்தோட்டை பொருளாதார வலயம் குறித்து ஆர்ப்பாட்டம் செய்து கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு இந்தியாவின் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. .இதன்போது அனைவருக்கும் சௌபாக்கியம் என்ற தொனிப்பொருளில் ஆந்திர மாநில முதல்வர் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பத்திரிகையில் வெளியாகிய காட்டூன் சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.