News Update :

Monday, January 16, 2017

TamilLetter

வாய் திறந்தாா் அமைச்சர் ரவூப் ஹக்கீம்வில்பத்து விவகாரத்தின் பின்னால் இருப்பது அப்பட்டமான இனவாதம். இதற்கு இந்த ஆட்சியாளர்கள் துணைபோக முடியாது. மக்களுக்காக அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு போராடவேண்டிய ஒரு முக்கியமான கட்டத்துக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.
அதற்கு எங்களுடைய அணி பலமாக இருக்கவேண்டும். இவ்வாறான பொது விடயங்களில் நாங்கள் பொதுவான விடயங்களில் உடன்பாடுகளை காணமுடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலொன்று நேற்றிரவு (15) புத்தளம் நுஹ்மான் வரவேற்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;
கரடிக்குழி, மறிச்சுக்கட்டி பிரச்சினை என்பது சமூகத்தின் பிரச்சினை. அதிலுள்ள மக்கள் வில்பத்து காட்டை அழித்து குடியேறியுள்ளதாக அநியாயமாக குற்றம்சாட்டுகின்றனர். இதில் ஒருவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும், நாங்கள் அந்த விடயத்தில் சமூகத்தின் பக்கம் நிற்கிறோம் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வில்பத்து பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து அதற்கான அதாரங்களை சேகரித்துள்ளேன். அதுகுறித்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதவுள்ளேன். அதில் ஜனாதிபதிக்கு பிழையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதையும் முஸ்லிம்கள் நாட்டு சட்டத்தை மீறுபவர்களாக பிழையாக சித்திகரிப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டவுள்ளேன்.
வில்பத்து காடழிப்பை காரணம்காட்டி கரடிக்குழி, மறிச்சுக்கட்டி முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு தடைகள் போடப்படுகின்றன. சிறிய விடயங்களை பூதாகரமாக்கி சமூகத்துக்கு தீங்கிழைப்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. சமூகத்தின் பிரச்சினைக்கு நாங்கள் குரல்கொடுக்கவேண்டும். மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக நாம் அரசுக்குள் இருந்துகொண்டு போராடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இவ்வாறான பொது விடயங்களில் நாம் உடன்பாடுகளை காணும் வைகையில் செயற்படவேண்டும். ஆனால், இயக்கமும் அதன் தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும். இப்போது இயக்குத்துள் இருந்துகொண்டே குழிபறிப்பவர்கள் இருக்கின்றனர். வெளியில் இருப்பவர்களுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டு கட்சிக்குள் இருந்தவாறே பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்கு நாங்கள் ஒருபோதும் சோரம்போக முடியாது.
சந்தர்ப்பவாதத்துக்காக கட்சியின் உறுப்பினர்களை பஷில் ராஜபக்ஷவிடம் ஒட்டுமொத்தமாக விற்றவர்களும் கட்சியில் இருக்கிறார்கள். தங்களுக்கு பதவி கிடைக்கும்வரை அவர்கள் இந்தக் கூத்தை தொடர்வார்கள். தாருஸ்ஸலாம் கட்டிடத்தை தலைவரும், முதலமைச்சரும் கபளீகரம் செய்ததாக கதைகட்டிவிடுகிறார்கள். இந்த அடிப்பைடையற்ற குற்றச்சாட்டுகளை புத்‌தகமாக வெளியிடுபவர்கள் இந்த கட்சிக்குள் இருப்பவர்கள்தான்.
தங்களுக்கு பதவி இல்லையென்றால் கட்சியும் அழியவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இவ்வாறான வேலையை செய்கிறார்கள். அவ்வாறான சதிகாரர்கள் இருந்தாலும் நாங்கள் கட்சியை பலமான நிலையில் வழிநடாத்திச் செல்கிறோம்.
கட்சியிலே பெரிய பூதாகரமான பிரச்சினையாக வெளிச்சக்திகள் பெருப்பித்துக்காட்டுவதற்கு காத்துக்கொண்டிந்த பிரச்சினைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் செயலாளர் நாயகம் தற்போது தலைவருடன் மேடையில் இருக்கின்‌றார்.
புத்தளம், வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்காக 24 மணித்தியாலம் இயங்கக்கூடிய கிளையொன்றை நாங்கள் புத்தளத்தில் திறந்துவைத்துள்ளோம். இந்த கிளையை வழிநடாத்தும் பொறுப்பை கட்சி செயலாளர் ஹஸன் அலி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் தேவை என்று, கட்சியை ஆரம்பித்தபோது மர்ஹூம் அஷ்ரப், “எமது பார்வை” என்ற பெயரில் சிறிய நூலொன்றை வெளியிட்டார். அதனை நாங்கள் மீள்பிரசுரம் செய்து, ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெறும் “வீட்டுக்கு வீடு மரம்” செயற்திட்டத்தின்போது வழங்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி, புத்தளம் முன்னாள் நகரபிதா கே.ஏ. பாயிஸ், வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், வட மாகாணசபை உறுப்பினர் எச்.எம். ரயீஸ், மு.கா. உயர்பீட உறுப்பினர்களான அன்வர், ஜௌபர் மரிக்கார் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-