கடலில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று பாறையில் மோதியது. படகில் அடிப்பாகம் உடைந்ததால் கடல் தண்ணீர் படகில் ஏற, அதில் இருந்த மக்கள் உயிருக்கு போராடினர். அவர்களை மலேசிய கடற்படையினர் சிரமப்பட்டு மீட்டனர்.
நேற்று காலையில் சபாவிலிருந்து பிலிப்பைன்ஸை நோக்கி சென்று கொண்டிருந்த படகு ஒன்றில் 10 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய காலை 11 மணிக்கு புலாவ் மாலாவி அருகே படகு சென்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக பாறை ஒன்றில் மோதியது.
பவளப் பாறையில் மோதிய படகு அதிலேயே சிக்கி கொள்ள, ஓட்டை விழுந்து கடல் தண்ணீர் படகில் ஏற தொடங்கியது. உடனடியாக படகில் இருந்த ஒருவர் மலேசியக் கடற்படைக்குத் தகவலைத் தெரிவிக்க, கடற்பறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காற்றின் வேகத்தால் உயரமான அலைகள் எழும்பியதால் படகில் சிக்கிக் கொண்ட 10 பேரைக் காப்பாற்றுவதில் கடற்படையினர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர். இருப்பினும், உடைந்த படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 10 பேரையும் மதியம் 2.30 மணிக்கு கடற்படையினர் மீட்டனர்.
கூடாத் நீரிணையில் இந்த சம்பவத்தில், லாபுவானைச் சேர்ந்த குழு ஒன்று பிலிப்பைன்ஸ் நோக்கி சென்றதாகவும் எதிர்பாரா காற்றின் வேகத்தால் அப்படகு திசை திரும்பி அருகில் இருந்த பாறையில் மோதியதாகவும் படகில் பயணித்தவர்களில் ஒருவர் கூறினார்.