News Update :

Monday, January 16, 2017

TamilLetter

அக்கரைப்பற்று அபிவிருத்திக்கு சிலர் தடை - ஏ.எல்.தவம்



அ. நாஜி


அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த சமூக சேவைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலக கட்டட நிர்மாண நடவடிக்கைகளை நிறுத்தி சிலர் அரசியல் லாபம் தேட கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அரைகுறையில் தடுத்து நிறுத்தி வைக்கபட்டுள்ள இக்கட்டிடத்தின் வரலாறு குறித்து பின்சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில்; அதனை ஒரு வரலாற்று அடையாளச் சின்னமாக வைப்பதற்கு தயாராக உள்ளேன் என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல் தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பதூர் நகரில் நேற்று(16) மாலை விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து அரசியலில் தோற்றுப் போன சிலர் பெரும் மன உழைச்சலுக்குள்ளாக்கப்பட்டிருப்பதை அவர்களின் செயற்பாடுகளிலிருந்து அறிய முடிகின்றது.

அவர்களின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் பற்றி நாம் கூறி இப்பிராந்திய மக்கள் அறிய வேண்டியதில்லை. அரசாங்கத்தின் நிதிகளைப் பெற்று தனதும், தனது தாய், தந்தையினரதும் பெயரில் கட்டடங்களுக்கும், ஏனைய அரச சொத்துக்களுக்கும் பெயர் சூட்டி உள்ளனர்.
சமூகத்தில் தமது சொந்த நிதியிலிருந்து பல கோடி ரூபாக்களை செலவு செய்து சமூக வேவையாற்றி வரும் பலர் தனது அல்லது தனது தாய், தந்தை உறவினர்களின் பெயரைச் சூட்ட விரும்பாத நிலையில் புகழுக்காக அரசாங்கத்தின் நிதிகளின் மூலம் எவ்வாறு தமது பெயர்களை அமைக்க முடியும்.

எந்தவித தீர்க்க தரிசனமும் இல்லாமல் அரசாங்கத்தின் கோடிக்கணக்கான நீதியினைப் பெற்று இவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பாழடைந்துள்ள நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த தன்னால் கொண்டு வரப்படும் அபிவிருத்திகள் அரசியல் சுயலாபங்களுக்காக தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த சமூக சேவைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலக கட்டட நிர்மாண நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு மேல் நீதிமன்றம் சென்று தடையுத்தரவை பெற்றுள்ளனர்.

எனவே தடையுத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள கட்டட நிர்மாணப் பணியினை நான் இனியொரு போதும் முன்னெடுத்துச் செல்வதற்கு தயாரில்லை. அதனை மக்கள் பார்வைக்காகவும், சுயலாபம் கொண்ட அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை அறிந்து கொள்வதற்காகவும் கைவிட்டுள்ளேன் என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-