அமெரிக்க நாடாளுமன்ற உறுப் பினர்களாக 5 இந்திய-அமெரிக் கர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அந்நாட்டு மக்கள் தொகையில் இந்தியர்கள் வெறும் 1 சதவீத பங்கு வகிக்கும் நிலையில் அவர்கள் இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்.அமெரிக்க நாடாளுமன்றத் துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். இதன்படி செனட் சபை உறுப்பினராக இந்திய-அமெரிக்கரான கமலா ஹாரிஸ் (52) பதவியேற்றுக் கொண்டார்.
இந்திய தாய்க்கும் ஜமைக்கா தந்தைக்கும் பிறந்த இவருக்கு துணை அதிபர் ஜோ பிடன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் இவர் செனட் உறுப்பினரான முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்ச்சியில், அவரது கணவர் டூக் எம்ஹோப், சகோதரி மாயா ஹாரிஸ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கமலா ஹாரிஸ் இதற்கு முன்பு கலிபோர்னியா அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்தார். பார்பரா பாக்சருக்கு பதில் இவர் செனட் உறுப்பினராகி உள்ளார். செனட் சபையில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட 7 பேரில் கமலாவும் ஒருவர் ஆவார்.
இதுபோல, மேலும் 4 இந்திய-அமெரிக்கர்கள் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் சபையின் (கீழவை) உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் அமி பேரா (51) தொடர்ந்து 3-வது முறையாக தேர்ந்தெடுக் கப்பட்டவர் ஆவார்.
திலிப் சிங் சாவுந்த், தொடர்ந்து 3 முறை அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்ட முதல் இந்தியர் என்ற சாதனையை 60 ஆண்டுகளுக்கு முன்பு படைத்திருந்தார். இந்த சாதனையை அமி பேரா இப்போது சமன் செய்துள்ளார்.
ரோ கண்ணா (40), ராஜா கிருஷ்ணமூர்த்தி (42), பிரமிளா ஜெயபால் (51) ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்ட மற்ற 3 இந்தியர்கள் ஆவர்.
இதில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் பிரமிளா. இவரது பதவியேற்பு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக 78 வயதான இவரது தாய் இந்தியாவிலிருந்து வாஷிங்டன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.