திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத் தயாரிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் தமிழ்ப் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கல் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின.
2015ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனைப் படைத்த படம் பாகுபலி. எஸ்எஸ்.ராஜமௌலி இயக்கிய இந்தப் படம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் தயாரான ஒரு பிராந்திய மொழிப் படம், உலகளவில் இப்படியொரு வெற்றியைப் பெற்றதில்லை என்று சினிமா ஆர்வலர்கள் பாராட்டினர்.
அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2017-இல் வெளியாகும் என அறிவித்த இயக்குநர் ராஜமௌலி, சொன்னபடி படப்பிடிப்பை முடித்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார்.
தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாகவே பாகுபலி -2 தயாராகியுள்ளது. இந்தியில் 'டப்' செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் தெலுங்கு போஸ்டர்கள் முன்பு வெளியாகின. இப்போது தமிழ்ப் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் அனுஷ்காவும் பிரபாஸும் அம்பு எய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் வயதான தோற்றத்தில் வந்த அனுஷ்கா, இந்தப் படத்தின் இளமையாக அழகாகக் காட்சியளிக்கிறார். இந்தப் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி ரசிகர்கள் மத்தியில் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.