வியட்னாமில், ஆடவர் ஒருவரின் வயிற்றிலிருந்த கத்திரிகோல் 18 வருடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.
மா வான் நாட் எனும் 54 வயதான ஆடவர், கடந்த 1998-ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கியபோது, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின் போது, அவர் வயிற்றினுள் தவறுதலாக ஒரு அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்திரிகோலை வைத்துத் தைத்து விட்டனர், மருத்துவர்கள்.
தன் வயிற்றில் கத்திரிகோல் இருப்பது தெரியாமல் வாழ்ந்து வந்த மா வான்ட் அண்மையில் ஒரு மருத்துவப் பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் போது தான், அதனைக் கண்டுபிடித்துள்ளார்.
சாதாரணமாக எல்லாரையும் போல அன்றாடவாழ்க்கையை வாழ்ந்து வந்த மா வான்ட்-டுக்கு திடீரென சில காலமாக வயிற்று வலி ஏற்பட்டு வந்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட அல்ட்ரா சவுண்ட் சிகிச்சையின் போது, அவர் வயிற்றின் குடல் பகுதி அருகே 15 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்திரிகோல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, கடந்த வார இறுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அந்த கத்திரிகோல் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 3 மணிநேரம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலை சீராக இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.