News Update :

Thursday, December 8, 2016

TamilLetter

ஒற்றையாட்சிக்குள் தான் அதிகாரப்பகிர்வு! - ஐதேக செயற்குழுவில் தீர்மானம்

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிரும், புதிய அரசியல் அமைப்பைத் தயாரிப்பதற்கு உறுதிபூண்டிருப்பதாக ஐதேகட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் செயற்குழுக்கூட்டம் நேற்றுக்காலை அதன் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைகளின்படி ஜனாதிபதி அவரது அதிகாரங்களைச் செயற்படுத்துவதன் மூலம் பாராளுமன்றத்தின் உயர்தன்மையைப் பாதுகாக்கவும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசமுள்ள விசேட அதிகாரங்களில் அவ்வாறே இடம்பெற முடியுமென்றும் செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

இதற்குப் புறம்பாக விருப்பு வாக்குமுறையை ஒழித்து விகிதாசார மற்றும் தொகுதிவாரியான முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்றவகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கும் செயற்குழு இணக்கத் தீர்மானத்தை எட்டியுள்ளது. 2015இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட 5 அம்ச வேலைத்திட்ட கொள்கையறிக்கையில் குறிப்பிடப்பட்ட அம்சங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு மேலும் சில தீர்மானங்கள் நேற்றைய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் முறையில் உரிய மாற்றத்தைக் கொண்டுவரும் பொருட்டு தேவையான யோசனைகளை அரசியல் அமைப்பு சபைக்கு முன் வைப்பதற்காக ஆறு உப குழுக்களினதும் அறிக்ைககளையும் எதிர்காலத்தில் எடுக்கப்படக் கூடிய தீரமானங்களில் தெரிவிக்கப்படும் யோசனைகளையும் உள்வாங்கி மக்கள் ஆணைக்கு ஏற்ற விதத்தில் செயற்படுவதெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ. தே. கட்சியின்செயற்குழுக் கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

1. 2015 பாராளுமன்றத் தேர்தலில் நாம் நாட்டு மக்களுக்கு முன்வைத்த 5 அம்ச வேலைத்திட்டம் கொள்கையறிக்கையின் பிரகாரம் நாட்டில் ஜனநாயகத்தை மேலும் வலுவடையச் செய்யும் பொருட்டு நல்லாட்சி அடிப்படையில் அரசதுறைக்கு மேலும் வலுச்சேர்க்கக் கூடிய வகையில் பிரதேச பிரதிநிதித்துவங்களை பலமடையச் செய்து பிரதேச மட்டத்தில் காணக்கூடிய சமச்சீரற்ற முறையை இல்லாதொழித்து மனித உரிமைகள் மேலும் வளமடையச் செய்து மக்கள் குழுக்களுக்கும் தனி நபர்களுக்குமிடையில் காணப்படுகின்ற சமச்சீரற்ற முறையை இல்லாதொழித்து சமநிலையை வலுவடையச் செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பொருட்டு அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது அனைத்துக் கட்சிகளுடனும் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் கொள்கையறிக்கையின்படி கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணையின் பிரகாரம் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் செய்யக் கூடிய விதத்தில் உச்சகட்ட அதிகாரப் பரவலாக்கலை செய்வதற்கும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி தமக்குரிய அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் பாராளுமன்றத்தின் 
உன்னதத்தன்மையை பாதுகாத்துக் கொள்ளவும் 

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பயன்படுத்தப்படும் விசேட அதிகாரங்களை அதே நிலையில் பயன்படுத்தவும், விருப்புவாக்கு முறையை முடிவுக்குக் கொண்டுவந்து விகிதாசார முறை மற்றும் தொகுதி அடிப்படையிலான தேர்தலை நடத்துவதற்குரிய விதத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் 6 உப குழுக்கள் முன்வைத்த அறி்க்கைகளையும் எதிர்காலத்தில் செயற்பாட்டுக் குழு முன் வைக்கும் அறிக்கையையும் கருத்தில் கொண்டு நாங்கள் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணைக்கு இயைவான விதத்தில் இணக்கப்பாடு தெரிவிக்கவும் முழுமையான அரசியல் அமைப்பு நகலை தயாரித்ததன் பின்னர் செயற் குழுவின் இணக்கப்பாட்டுடன் அதற்கு அனுமதியைப் பெற்றுக்கொடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

2. ஜனநாயகம் மனித உரிமைகள், சுதந்திரம், அடிப்படை உரிமைகள், மக்களிள் இறைமை மட்டுமன்றி பாராளுமன்ற அதிகாரத்தையும் காலில் போட்டு மிதித்து குடும்ப ஏகாதிபத்திய இருண்டயுகத்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட எமது தாயகத்தை ஜனவரி 8ஆம் திகதி ஜனநாயகப் புரட்சியின் மூலம் மீட்டெடுத்து மீண்டும் உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும் சவால்மிக்க பணியொன்றுக்கு பங்களிப்புச் செய்த அனைத்து சமூகத்தவர்களுக்கும் எங்களுடைய நன்றியைத் மீண்டுமொரு தடவை சமர்ப்பித்துக் கொள்கிறோம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-