இலங்கை அதிபர் சேவை தரம் 111 பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிபர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகளில் பொறுப்புக்களை வழங்குமாறு கோரி, யாழ். மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாணப் புதிய அதிபர்கள் சங்கம் தெரிவித்தது.
புதுவருடத் தொடக்கத்தில் பாட சாலைப் பொறுப்புக்கள் உரிய முறையில் வழங்கப்படாவிட்டால் ஜனவரியில் வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய தீர்மானம் யாழ்.ஆனைப்பந்தியிலுள்ள நாவலர் கல்வி நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற வடக்கு மாகாணப் புதிய அதிபர் சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தீர்மானம் தொடர்பாக விளக்கமான கடிதங்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் ஆகியோருக்கு கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று சங்கத்தின் செயலாளர் எஸ். நேதாஜி தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சு இலங்கை அதிபர் சேவை தரம் 111 பதவிக்கு ஆள்சேர்ப்புச் செய்வதற்கு நடத்திய போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஆகியவற்றின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 398 ஆசிரியர்கள் இலங்கை அதிபர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குக் கடந்த மே மாதம் 9 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகும் வகையில் மத்திய கல்வி அமைச்சு நியமனங்களை வழங்கியுள்ளது.
அவர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான பாடசாலை அதிபர்களை உருவாக்கல் என்ற நோக்கில் 30 வேலை நாள்கள் சேவை முன்பயிற்சியும் வழங்கியுள்ளது.
நியமனம் வழங்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையிலும் உரிய பாடசாலை பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை.
தமது பழைய பாடசாலைகளில் ஆசிரியர் பதவி நிலைக்கான கடமைகளையே ஆற்றி வருகின்றனர். பலர் பதில் அதிபர்களுக்குக் கீழ் பணிபுரிகின்றனர்.
“பாடசாலைப் பொறுப்புக்கள் உரிய முறையில் வழங்கப்படாமையால் நம்பிக்கை இழந்த நிலையிலேயே நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கான சட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வருடம் பாடசாலை ஆரம்பத்தில் உரிய பாடசாலைகளில் பொறுப்புக்கள் வழங்கப்படாதுபோனால் யாழ். மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாணப் புதிய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ். நேதாஜி மேலும் கூறினார்.