மாகம்புர துறைமுகத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கடற்படையினரைக் கொண்டு தாக்குதல் நடத்த உத்தரவிட்டதன் ஊடாக தான் ஒரு மிருகம் என்பதை கடற்படைத் தளபதி நிரூபித்துவிட்டதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பகிரங்கமாக ஒருவரை கைது செய்யப்போவதில்லை என்று தெரிவிக்கும் நாடகம் இடம்பெற்று ஒரு வாரங்களுக்குப் பின்னர் நாட்டில் கடற்படைத் தளபதியின் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து அலரி மாளிகையில் மற்றுமொரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கீழ்த்தரமாக நடந்துகொண்டதற்காக கடற்படைத் தளபதியை பாராட்டிய பிரதமர் கௌரவித்து குறித்த நாடகத்தை முடித்து வைத்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை பார்க்கும் போது ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தனது இறுதிப் பயணத்தை ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலொன்றின் மூலமே ஆரம்பித்து வைக்கின்றனர். தற்போதைய அரசாங்கமும் தனது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதையே அம்பாந்தோட்டை நிகழ்வு உட்பட அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படைத் தளபதி நடந்துகொண்ட விதம் மிகவும் கீழத்தரமானது. மிருகத்தைவிட மோசமாக அவர் நடந்துகொண்டார். அவர் அன்று நடந்துகொண்ட விதத்தை கூறுவதென்றால் மிருகமொன்று கடற்படைத்தளபதியானால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே அன்று அவர் நடந்துகொண்டிருந்தார்.
ஆனால் இந்த அரசாங்கம் குறித்த சம்பவத்தை நியாயப்படுத்த பல வழிகளில் முயற்சித்து வருகின்றது. குறிப்பாக அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சம்பவம் நடைபெற்று ஒருசில மணித்தியாலங்களுக்குள் குறித்த சம்பவத்திற்கு தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளரே காரணம் என கூறி அதனை மூடிமறைக்க முற்பட்டிருந்தார்.
அதேவேளை நேற்றைய தினம் பிரதமர் கடற்படைத்தளபதிக்கு பாராட்டுத் தெரிவித்ததன் ஊடாக துறைமுகத்தில் எதுவுமே நடக்கவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைந்திருந்தார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை முழுமையாக கண்டிக்கின்றோம் என்றார் டலஸ் அழகப்பெரும.