News Update :

Wednesday, December 7, 2016

TamilLetter

ஜெயலலிதாவைப் பார்த்துட்டு வா!’ – கனிமொழியிடம் கலங்கிய கருணாநிதி -




தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத அளவுக்கு உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. ‘ஜெயலலிதா இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதில் மிகுந்த வேதனைப்பட்டார் கருணாநிதி என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மீசெல்ஸ் எனப்படும் உடல் கொப்புளங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. ராஜாத்தி அம்மாள், செல்வி, கனிமொழி உள்ளிட்டவர்கள் அவரைக் கவனித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் கோபாலபுரம் வீட்டிற்குத் திரும்புவார் என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். அவர்கள் நம்மிடம், “முன்னாள் அமைச்சர் கோ.சி மணி இறப்புச் செய்தியை அவரிடம் தயங்கித்தான் சொன்னோம். ஏனென்றால், ஒன்றுபட்ட தஞ்சையாக இருந்த சமயத்தில் கோ.சி.மணியின் கழக ஈடுபாட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் கலைஞர். ‘உடல் நலமில்லாமல் அவர் இறந்துவிட்டார்’ என்ற செய்தியை எப்படிச் சொல்வது எனத் தயங்கினோம். ஒருகட்டத்தில், மணியின் இறப்பைப் பற்றிச் சொன்னதும், மிகவும் வேதனைப்பட்டார். உடனே, கோ.சி மணி குறித்து விரிவான அறிக்கையை சண்முகநாதன் உதவியோடு தயாரித்தார். நேற்று முன்தினம் ஜெயலலிதா இறந்த செய்தியை அவருடைய கவனத்துக்கு கொண்டு சென்றார் கனிமொழி. அப்போலோவில் நடந்த சம்பவங்களைக் கேட்டவர், மிகுந்த கவலையோடு சில நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். மறுநாள் ராஜாஜி மண்டப நிகழ்வுகளை எடுத்துச் சொன்னார்கள்.

அருகில் இருந்த கனிமொழியிடம், ‘அந்த அம்மாவைப் போய் பார்த்துட்டு வாம்மா’ என அனுப்பி வைத்தார். தொடர்ந்தும் ராஜாஜி மண்டபத்தில் நடக்கும் தகவல்களைக் கேட்டு அறிந்து கொண்டார். ஜெயலலிதாவின் மரணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அப்போலோவில் இருந்து குணமாகி வந்துவிடுவார் என்றுதான் நம்பினார். முதல்வருக்கான இறுதிக் காரியங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் அளவுக்கு அவர் உடல்நிலை இல்லை. முதுகில் உள்ள புண்களுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். புண்களால் ஏற்படும் அரிப்புகளால்தான் தூக்கமில்லாமல் தவித்து வந்தார். நீண்ட நாட்கள் படுக்கையில் இருப்பதால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிர்பந்தம். எனவே, இன்னும் ஓரிரு நாட்கள் சிகிச்சை தொடரும் எனக் குடும்பத்தினர் அறிவுறுத்திவிட்டார்கள்!” என்கின்றனர்.
நோய் எதிர்ப்பாற்றல் குறைவு எனப்படும் ஆட்டோ இம்யூன் குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறார் கலைஞர். இதன் விளைவாகவே, கொப்புளங்கள் ஏற்பட்டன. இதனை சரி செய்வதற்கான சிகிச்சை முறைகள் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டன. வழக்கமான பணிகளை விரைவில் தொடங்குவார்” என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-