News Update :

Wednesday, December 7, 2016

TamilLetter

புலிகளின் வங்கியில் இருந்த நகைகள் எங்கே? கப்பல்கள் எங்கே? - நாடாளுமன்றத்தில் கேள்வி





விடுதலைப் புலிகளின் வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்று ஜேவிபி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

போர் முடிவடைந்தப் பின்னர் அரசியல் தேவைக்காகவே இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர். நாட்டுக்காக சேவையாற்றிய முக்கிய இராணுவ அதிகாரிகள் கழற்றிவிடப்பட்டனர். இதனால் பலர் குடும்பத்தோடு வெளிநாடுசென்று வாழ்ந்து வரும் நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவர்களை அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே பயன் படுத்தப்பட்டனர்.

நாம் முழு இராணுவத்தையும் குறைகூறவில்லை. இந்த இராணுவத்தில் ஒருகுழுவை உருவாக்கிக் கொண்டே கடத்தல், கொலை செய்தல், அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகள் கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்டன. எனவே, ஒட்டுமொத்த இராணுவத்தின் நன்மதிப்பையும் காக்க வேண்டுமெனில் குறித்த குழுவை கைதுசெய்து சட்ட நவடிக்கை எடுக்கவேண்டும். அந்த குழு தொடர்பான தகவல்களும் அம்பலப்படுத்தப்படவேண்டும்.

அதேவேளை, போர் முடிவுற்றபோது பெருமளவு தங்கம் மீட்கப்பட்டது. புலிகளின் வங்கியிலிருந்து மீட்கப்பட்ட தங்கத்தில் 45 கிலோ கிராம் மாயமாகியுள்ளது என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் கைப்பற்றப்பட்ட தங்கத்துக்கு என்ன நடந்தது? கே.பியின் 600 வங்கிக்கணக்குகளும், 5 கப்பல்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன என்று அரச ஊடகம் செய்தி வெளியிட்டது. அப்போது ஊடகப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தான் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார். எனவே, மேற்படி வங்கிக் கணக்குகளுக்கும், கப்பல்களுக்கும் என்ன நடந்தது? இவை குறித்து மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-