இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத்தளமான பாலியைப் பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. அது 6.2 ஆக ரிக்டரில் பதிவானது. ஆனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என செய்திகள் கூறியுள்ளன.
இன்று காலை 6.30 மணிக்கு பாலி தீவிற்கு மேற்கே 300 கிமீ தூரத்தில் 72 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்தது. இவ்விடம் சும்பவா தீவிற்கு மிக அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தீவில் இருந்தவர்கள் இந்த நிலநடுக்கத்தை அதிக நேரம் உணர முடிந்ததாகவும் காலை என்பதால் பலர் அப்போது தான் கண் விழித்திருந்தனர் என்றும் சுற்றுலா பயணி கூறினார். மேலும் அதிர்வை உணர்ந்தவுடன் பலர் பாதுகாப்புக்காக வீட்டை விட்டு ஓடினர் என சும்பவா தீவில் வசிக்கும் நபர் ஒருவர் தெரிவித்தார்.
இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படாத நிலையில், சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.