தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நிலைக் குறைவு காரணமாக திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். தனது ஒற்றை ஆளுமையால் கட்சியின் அனைத்து தொண்டர்களையும் வழி நடத்திய ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவின் பொருளாளர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரது தலைமையின் கீழ் 31 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க கட்சி நிச்சயம் உடையும் என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:-அ.இ.அ.தி.மு.க. ஒரே கட்சியாக இருக்காது. சசிகலா நடராஜன் அந்த கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பார். பன்னீர் செல்வத்தை சுதந்திரமாக இருக்க விடமாட்டார். தன்னுடைய குடும்பத்தில் இருந்து பன்னீர் செல்வம் இடத்திற்கு ஒருவரை கொண்டு வருவார். பன்னீர் செல்வத்திற்கு கட்சிக்குள் எந்தவித அடித்தளமும் இல்லை. அதேபோல் சசிகலாவிற்கும் எந்தவொரு அரசியல் புத்திசாலித்தனமும் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.