News Update :

Wednesday, December 14, 2016

TamilLetter

சிறந்த கால்பந்து வீரர் விருதினை வாகைசூடினார் ரொனால்டோ!



சிறந்த கால்பந்து வீரருக்கான 'பாலோன் டி'யோர்' விருதினை வாகைசூடினார் ரியல் மாட்ரிட் மற்றும் போர்த்துகல் நாட்டின் அதிரடி கோல்மன்னன் கிறிஸ்தியானோ ரொனால்டோ. நான்காவது முறையாக இந்த விருதினை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது. 
இந்த விருதுக்கான தேர்வில் இறுதிச் சுற்றுவரை ரொனால்டோவுக்கு பார்சிலோனாவின் முன்னணி வீரர் லியோனல் மெஸ்சியும் அத்லெட்டிக்கோ மாட்ரிட் குழுவின் கோல் வீரர் அண்டோய்ன் கிறிஷ்மானும் கடும் போட்டியை வழங்கினர்.
மே மாதம் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் குழுவை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் ஆக்கியதில் பெரும் பங்கு ஆற்றியுள்ள ரொனால்டோ, அதன் பின்னர் முதன் முறையாக போர்த்துக்கல் குழு ஐரோப்பியா சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் உதவினார்.
"நான்காவது முறையாக இந்த விருதினை நான் வெல்வேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. நான் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்" என்று விருதினைப் பெற்றுக் கொண்ட போது ரொனால்டோ தெரிவித்தார்.
"எனது ரியல் மாட்ரிட் கிளப்பின் சக ஆட்டக்காரர்களுக்கும் போர்த்துக்கலைச் சேர்ந்த சக ஆட்டக்காரர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்" என்று அவர் சொன்னார்.
இந்த விருதினை ஏற்கெனவே ஐந்து முறை வென்றிருக்கும் அர்ஜெண்டினா வீரர் மெஸ்சி, இம்முறை 2ஆவது இடத்தைப் பிடித்தார். பிரென்சு வீரரான கிறிஷ்மான் 3ஆவது இடத்தைப் பெற்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-