இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என அறிவித்தத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் நேரில் விளக்கமளித்துள்ளார்.
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென அறிவித்ததும், 'புதிய இந்தியா பிறந்தது' என முதல் ஆளாய் வாழ்த்துச் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் இதற்கு எத்தகைய எதிர்ப்பும் கிளம்பவில்லை.
ஆனால், சில நாள்கள் கழித்து மக்கள் வங்கி, ஏடிஎம் வாசல்களில் வரிசையில் நின்று மயங்கி சுருண்டு விழுந்த போதுதான் இந்தப் பண ஒழிப்பின் பாதகங்கள் நாட்டையே அதிரச் செய்தன.
இந்த சூழலில்தான் நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். இரு தினங்களுக்கு முன்பு இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, தற்போதைய தமிழக மற்றும் இந்திய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. நாட்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எழுந்துள்ள பிரச்சனைகள், மக்கள் படும் அவதிகள் குறித்து ரஜினிகாந்திடம் ப.சிதம்பரம் விவரித்தார்.
அப்போது, தாமும் நிறைய விஷயங்களை கேள்விப் படுவதாகவும், ஊடகங்களில் கவனிப்பதாகவும் ரஜினிகாந்த் கூறினாராம். பண ஒழிப்பு நடவடிக்கையால் மக்கள் படும் அவதிகளைப் பார்த்து மிகுந்த வருத்தப்படுவதாக ரஜினி தெரிவித்தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.