News Update :

Thursday, December 15, 2016

TamilLetter

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தின் இன்றைய நிலை



அம்பாறை – கஞ்சிகுடிச்சாறில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில், முகாமொன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த 7 ஏக்கர் காணியில், கடந்த சில நாட்களாக சிரமதான பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், அங்கு எல்லைகளை நிறுவியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் போர் முடிந்த பின்னர் இராணுவத்தினரால் நிர்மூலமாக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ள பின்னணியிலேயே தற்போது கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்தை கையக்கப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் எதற்காக தமிழ் பிரதேசங்களில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தவராசா கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவைளை, விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூரலாம் என்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ள இந்த சூழலில், மாவீர் துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மட்டக்களப்பு மாவட்ட வலுவிழந்தோர் சங்கத்தின் செயலாளர் எஸ். பிரபா தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-