News Update :

Wednesday, December 21, 2016

TamilLetter

தவம் இன்று மாகாண சபையில் போர்க்கொடி



வட்டமடுப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்குமிடையில் இருக்கின்ற காணி தொடர்பான இழுபறியை, அரசியல் அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொள்ளுவதற்கான மூலாதாரமாகப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தி, அப்பாவி தமிழ், முஸ்லிம் விவசாய மற்றும் பண்ணையாளர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல். தவம் அவர்கள். இன்றைய விவசாய நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் வினியோகத்திற்குமான அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், இந்த அமைச்சினை வைத்திருப்பவர் தமிழரசுக் கட்சியின் செயலாளராகவும் இருப்பதனால், தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைக்கும் பாரிய பொறுப்பினைக் கொண்டுள்ளார் என்ற வகையில், அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வட்டமடு பிரதேச விவசாயிகளின் பக்கம் அவசரமாக கவனத்தைச் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். ஏன்எனில், தற்போது ஏழை விவசாயிகளும் பண்ணையாளர்களும் தங்களது விவசாய மற்றும் பண்ணை வளர்ப்பு நோக்கத்திற்காக வட்டமடுப் பிரதேசத்திற்குச் செல்ல முடியாத துரதிஷ்டவசமான நிலவரம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் இதுவரையில் தங்களால் விதைக்கப்பட்டிருக்கின்ற சுமார் 300 ஏக்கர் விவசாயக் காணிகளுக்குச் சென்று தமது விவசாயத்தைத் தொடர முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். 300 ஏக்கர்களிலும், ஒரு ஏக்கருக்குச் சுமார் 15,000 ரூபா வீதம் இதுவரையில் இந்த விவசாயிகள் செலவிட்டுள்ளனர். ஏழைகளான இவர்கள் கடனாகவும் அடகிற்கும் பெற்ற பணத்தினை நிலத்தில் போட்ட பின்னர், விவசாயம் செய்வதிலிருந்தும் தடுக்கப்பட்டால் அவர்களுடைய நிலை என்னவாகும் என்பதை எண்ணிப்பாருங்கள். 1968 களிலிருந்து வட்டமடுப் பிரதேசத்தில் விவசாயத்தையும் பண்ணை வளர்ப்பையும் இரண்டு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் எந்தப் பிரச்சினைகளுமின்றி செய்து வந்தனர். அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நிருவாகரீதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிரிக்கப்பட்டிருந்தாலும், உறவைப் பொறுத்தவரை சகோதரர்களாகவே வாழ்ந்து வருவதால் வட்டமடு சம்மந்தமான எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை. ஆனால், 2011 ஆம் ஆண்டிலிருந்து அதிகாரத்தை இழந்து நிற்கும் எமது பிரதேசத்தைச் சேராத அரசியல்வாதிகள் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் உபாயமாக வட்டமடு பிரச்சினையைக் கையாள்வது கவலையளிக்கிறது. குறிப்பாக சம்பந்தமில்லாத வகையில் பௌத்த மதகுருமார்களைக் கொண்டுவந்து சம்மந்தப்படுத்துவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நடவடிக்கையானது இப்பிரச்சினையில் தமிழ் சமூகத்தையும் பாதிக்கச் செய்யும் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஆகவே, கௌரவ விவசாய அமைச்சரும் மாகாண முதலமைச்சரும் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினையைச் சுமூகமாகப் பேசித்தீர்த்து, செய்யப்பட்டுள்ள விவசாயத்தைத் தொடர்வதற்கும், பண்ணையார்கள் தங்குதடைகளின்றி அப்பிரதேசத்திற்குச் செல்வதற்கும் ஆவண செய்து, இப்பிரச்சினையில் அரசியல் நோக்கத்தோடு செயற்பட்டு இனரீதியிலான முறுகல்களை தவிர்க்க உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-