News Update :

Wednesday, December 28, 2016

TamilLetter

முதல் முஸ்லிம் பெண் விமானிக்கு உயிர் ஆபத்து



அமெரிக்காவிலேயே அடைக்கலம் பெறப்போகிறேன். நான் நாடு திரும்பப் போவதில்லை. ஆப்கானிஸ்தானில் எனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. தலிபான்களால் என் உயிருக்கு ஆபத்து என்று ஆப்கானின் முதல் பெண் விமானியான 25 வயதுடைய நிலோபர் ரஹ்மானி பகிரங்கமாக அறிவித்ததால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆப்கான். மக்களால் 'பெண் சிங்கம்' என்று பெரிதும் போற்றப்பட்ட முதல் பெண் விமானியான நிலோபர் ரஹ்மானி, அமெரிக்க விமானப் படையில் கடந்த 15 மாதங்கள் பயிற்சி பெற்று வந்தார்.
பயிற்சி முடிந்து ஆப்கான். திரும்பி, விமானப் படையில் பணியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அமெரிக்காவை விட்டுப் புறப்படுவதற்கு முதல் நாளன்று,  தாம் அமெரிக்காவில் தஞ்சம் அடைய இருப்பதாக, யாரும் எதிர்பாராத வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஆப்கானில் போதுமான பாதுகாப்பு இல்லை. பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மேலும் நாட்டை விட்டு இளைஞர்களும்  இளம்பெண்களும் வெளியேறி வருகின்றனர் எனவே தான் அமெரிக்காவிலேயே தங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஆப்கான். இராணுவ அமைச்சகச் செய்தி தொடர்பாளர் முகமது ரத்மனோஷ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நிலோபர் ரஹ்மானி யின் இந்த முடிவு எதிர்பாராதது, பொறுப்பற்றது. மேலும் வெட்ககேடானது என்று அவர் சாடினார். 
லட்சக்கணக்கான ஆப்கான். பெண்களின் அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் திகழ்ந்தவர் நிலோபர் ரஹ்மானி. கடந்த ஆண்டு அமெரிக்க அரசின் பெண்களுக்கான வீர விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தலிபான் தீவிரவாதிகள் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இருப்பினும், அதுகுறித்து இதுவரை அவர் பொருட்படுத்தா மலேயே இருந்து வந்தார். இந்நிலையில் அவரது இந்த திடீர் முடிவு ஆப்கான் மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-