ஜனநாயக கட்சியின் முக்கிய மின்னஞ்சல்களை ரஷ்ய உளவுத்துறை திருடியுள்ளதால், ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம் என்று அமரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இத்தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தோல்வியை சந்தித்தார். ஹிலாரியின் இத்தோல்விக்கு ரஷ்ய உளவுத்துறை தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது.
ஏனெனில் ஹிலாரியின் மின்னஞ்சல்களை ரஷ்ய உளவுத்துறை ஹேக்கிங் செய்து விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டிருந்தது.
அதில் ஹிலாரி அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் பதவியில் இருந்த போது அரசு மின்னஞ்சல்களை பயன்படுத்தாமல் தன் தனிப்பட்ட மின்னஞ்சல்களை உபயோகித்தார் என குற்றம்சாட்டப்பட்டது.
ஹிலாரியின் 6.5 லட்சம் மின்னஞ்சல் ஊடகங்களில் வெளியாகின. இது அவருக்கான வெற்றி வாய்ப்பை வெகுவாக குறைத்ததாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அண்மையில் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.
இக்கருத்தை அமெரிக்காவின் FBI அமைப்பும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒபாமா அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்களை ரஷ்ய உளவுத்துறை ஹேக்கிங் செய்திருப்பதாகவும், இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புதின் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ஹேக்கிங் செய்யப்பட்டது, ரஷ்ய அரசுக்கு தெரியாமால் நடந்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ரஷ்ய அரசின் உயர்மட்டத்தில் நடைபெறும் இம்மாதிரியான செயல்கள் ரஷ்ய ஜனாதிபதியான புதின் கவனத்திற்கு செல்லாமல் நடைபெறாது எனவும் கூறியுள்ளார்.
மேலும் ஜனநாயக கட்சியின் முக்கிய மின்னஞ்சல்களை ரஷ்ய உளவுத் துறை திருடியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது சைபர் போர் (இணையம் வழி ஆவணங்களை அழித்தல்) தொடுப்போம் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.
வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி டிரம்ப் அமரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.