News Update :

Thursday, December 8, 2016

TamilLetter

பொத்துவில் விளையாட்டுக் கழகங்களுக்கு பிரதியமைச்சர் பைசல் காசீமினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு


(எஸ்.எம்.அறூஸ், ஏ.எல்.றமீஸ்)













பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுகாதார பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான பைசல் காசீமின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (2016-12-07)மாலை பொத்துவில் இளைஞர் மற்றும் விளையாட்டுப் பேரவையின் தலைவரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எச்.ஏ.ரஹீம் தலைமையில் இடம்பெற்றது.

பொத்துவில் இளைஞர் மற்றும் விளையாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கி வைத்தார்.

இத் திட்டத்திற்காக சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசீம் 2016ம் ஆண்டுக்கான தனது வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந் நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் பொத்துவில் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட 16 விளையாட்டுக் கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.


அத்தோடுபொத்துவில் இளைஞர் மற்றும் விளையாட்டுப் பேரவையின் அங்கத்தவர்களுக்கான சீருடை அறிமுகமும் செய்து வைக்கபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் உரையாற்றும்போது,
விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டுத்துறையை மாத்திரம் இலக்காக கொண்டிராமல் சமூக சேவைகளிலும் தமது வீரர்களை ஈடுபடுத்த வேண்டும். அத்தோடு ஒரு விளையாட்டை மாத்திரம் முன்னடுக்காமல் சகல விளையாட்டுக்களையும் பயிற்சி பெறுகின்ற வகையில் தங்களது செயற்பாட்டை கழகங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பொத்துவில் பிரதேசத்தில் பொத்துவில் இளைஞர் மற்றும் விளையாட்டுப் பேரவை மிகச்சிறந்த முறையில் இயங்கி வருகின்றது.இதனை பாராட்டுகின்றேன். பாடசாலையில் கல்வி கற்கின்ற எல்லோராலும் வைத்தியர்களாகவோ,பொறியியலாளர்களாகவோ,ஆசிரியர்களாகவோ ஆகிவிட முடியாது.

விளையாட்டுத்துறையில் திறமையானவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்கள் அத்துறையில் சிறப்புற்று விளங்க வேண்டும். பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு மாணவர்கள் வெளியேறும்போது அவர்களுக்கு இருக்கின்ற திறமைக்கேற்ற வகையில் தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாடசாலைகளைப் பொறுத்தமட்டில் இன்று இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது குறைவாகிவிட்டது. அதிபர்களைக் கேட்டால் கூடுதலான பணம் தேவை என்று சொல்லுகின்றார்கள். பெற்றோர்களைப் பொறுத்தமட்டில் தங்களது பிள்ளை படிக்க வேண்டும். வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் விளையாட்டு வீரா்களுக்கு இவ்வாறான சவால்கள் காணப்படுகின்றது. தேசிய, சர்வதேச மட்டத்தில் நமது விளையாட்டு வீரா்கள் வெற்றி பெற்று சாதனைகள் படைத்துள்ளனர். எந்தத் துறையிலும் இல்லாத பெயரும்,புகழும் விளையாட்டுத்துறையில் வீரா்களுக்குக் கிடைக்கின்றது.
முழுக்கிழக்கு மாகாணத்திலும் பொத்துவில் மண்ணுக்கு பெரும் புகழை சேர்த்தவர் ஓட்ட வீரா் அஸ்ரபாகும். தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று அரிய அந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

பொத்துவில் பிரதேசத்தில் கூடுதலான விளையாட்டுக் கழகங்கள் செயற்பட்டு வருவதால் குறைந்தது 5 விளையாட்டு மைதானங்களாவது தேவையாகும். இவ்வாறு இருந்த போதிலும் தற்போதைய நிலையில் இரண்டு மைதானங்கள் விரைவாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

பிரதேச செயலாளர் இனங்கட்டுள்ள இரண்டு இடங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவது சிறந்ததாகும் என்பது எனது நிலைப்பாடாகும். எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்று பல மான இயக்கமாக அரசாங்கத்தில் உள்ளது. கடந்த காலத்தில் அரசாங்கத்தில் நாம் இருந்தாலும் கூடுதலான அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு எமக்கு வாய்பளிக்கப்படவில்லை.

இன்று அந்த நிலை இல்லை. நமது கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் அமைச்சின் மூலம் நிதிகளைப் பெற்று பொத்துவிலுக்கான சர்வதேச மைதானத்தை அமைப்பதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.என்.எம்.முஸாராப் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-