குல்ஸான் எபி
அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட வேண்டிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அட்டாளைச்சேனை அணைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவரின் முன்னிலையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டன.
அட்டாளைச்சேனை அணைத்து பள்ளிவாசல் சம்மேளனம் ஏற்பாடு செய்த தேசியப்பட்டியல் தொடர்பான கலந்துரையாடல் சம்மேளனத்தின் தலைவர் அனீஸ் தலைமையில் இன்று(31) காலை இடம் பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உச்சபீட உறுப்பினர்களான கட்சியின் ஸ்தாபக செயலாளர் எஸ்.எம்.ஏ.கபூர்,யு.எல்.வாஹீட்,பளீல் பீ.ஏ,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில்,முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எல்.நபீல் ஆகிய ஆறு உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான கட்சியின் ஆதரவாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்ட உறுப்பினர்கள் அட்டாளைச்சேனை பிரதேசம் முப்பது வருடமாக கட்சியினால் ஏமாற்றப்பட்டு வருகின்றது என்றும் தலைவர் ஊருக்கு வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டியது அவசியம் எனவும்,இதற்கு மேல் எமது பிரதேசம் மௌனமாக இருந்து விடாது எனவும் ஆக்ரோசமாக உரையாற்றினார்கள்.
அத்தோடு எதிர்வரும் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் உயர்பீட கூட்டத்தில் இந்த ஆறு உயர்பீட உறுப்பினர்களும் தலைவருக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தலைமைத்துவம் எமதூருக்கு வழங்கிய வாக்குறுதியை மீறும் சந்தர்ப்பத்தில் தலைமைக்கு எதிரான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆறு உறுப்பினர்களும் உடன்பட்டனர்.
மேலும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும்; கட்சியில் வகிக்கும் பதவிகளை ராஜீனமா செய்ய வேண்டுமெனவும் கட்சியின் முக்கியஸ்தர்களால் ஆலோசனையும் வழங்கப்பட்;டது.