தமிழகத்தை அச்சுறுத்தி வரும் வர்தா புயல் தீவிரமடைந்து வருகிறது. இன்று பிற்பகலில் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் கடலுக்குள் சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 200 மீனவர்கள் இன்னமும் கரை திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் பீதியடைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து 102 கிலோமீட்டர் தூரத்தில் மையமிட்டுள்ள வர்தா புயல் மேற்கு நோக்கி மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகலில் சென்னை அருகே கரையைக் கடக்கும் போது, மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இதனையடுத்து 36 மணி நேரத்திற்குக் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாகவே வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்திருந்தது.
எனினும், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னாள் நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 4 நாட்களுக்கு முன்னர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். வர்தா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு இருந்து வரும் நிலையில் கடலுக்குள் சென்ற 200 மீனவர்கள் இன்னமும் வீடு திரும்பவில்லை.
இதனால், கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கு என்ன ஆயிற்றோ என உறவினர்கள் பீதியடைந்துள்ளனர்.