இரண்டு இலட்சம் பேரைக் காவு கொண்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை அழிவின் 12ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இந்நிலையில், சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று காலை 9:25 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்காக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுனாமியால் உயிர்நீத்தவர்களின் நினைவாக ஒட்டுச்சுட்டான் – புதுக்குடியிருப்பு வீதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் இன்று காலை திறந்துவைக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. முள்ளியவளை மற்றும் உடுத்துறையிலும் சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 20 அடி உயரத்திற்கு உருவெடுத்த சுனாமி பேரலையில் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 220 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இலங்கையில் மாத்திரம் சுமார் 35 ஆயிரம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, சுமார் 5 இலட்சம் பேர்வரை இடம்பெயர்ந்தனர்.