தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 10,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, தனியார் பிரிவினருக்கும் அரிசி இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசியின விலைப்பட்டியல் மற்றும் மாதிரி இந்தியாவின் புது டெல்லியிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இன்று கிடைக்கப்பெற்றதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு குறிப்பிட்டது.
நாளை கூடவுள்ள கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் விலை மனு குழுவின் ஊடாக, தகுதியான நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, நாளைய தினமே அரிசி இறக்குமதிக்கான முற்பதிவு செய்யப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.பி.தென்னகோன் கூறினார்.
இதேவேளை, பெரும்போகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்ப்பதற்கு பதிலாக, அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு எடுத்துள்ள தீர்மானத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் முன்வைத்த யோசனைக்கு அமைய, அரசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி தனியார் பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போதை நிலைமைக்கு அமைய ஆயிரத்திற்கும் அதிகமான அரிசி ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தரளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னிலையிலுள்ள அரிசி உரிமையாளர்கள் சிலருக்கு மாத்திரம், அரசாங்கத்திடமுள்ள நெல் வழங்கப்பட்டுள்ளதாக இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.