News Update :

Tuesday, November 22, 2016

TamilLetter

புலிகள் மீதுள்ள சிங்கள மக்களின் வைராக்கியமே வடக்கு மக்கள் மீது குறை கூறுவதற்குக் காரணம்விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்கள மக்கள் மனதில் காணப்படும் வைராக்கியமே, வடக்கு மக்கள் எதனை செய்தாலும் அவர்கள் குறை சொல்லுவதற்குக் காரணம் என்று  வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
‘வடக்கு-தெற்கிற்கான உரையாடல்’ என்ற தொனிப்பொருளில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் கொழும்பில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அளித்த பதில்கள் வருமாறு-
சிங்களவர்களின் மனதில் வைராக்கியம்
விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்களவர்களின் மனதில் வைராக்கியம் உள்ளது. இதனால் தான் வடக்கில் உள்ளவர்கள் எதை செய்தாலும் குறை கூறுகின்றார்கள்
தமிழ் மக்களின் உரிமை
தமிழ் மக்களுக்கு என்று பூர்வீகம் கலாசாரம், மொழி , சமயம் என அனைத்தும் உள்ளது. இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு உள்ளஅனைத்து உரிமைகளும் எமது மக்களுக்கும் கிடைக்க வேண்டும். இதனையே நாம் கூறி வருகின்றோம்.
புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த நாம் வலியுறுத்தியுள்ளோம். நன்கு படித்தவர்களுக்கு சமஷ்டி என்பதன் அர்த்தம் புரியும். ஆனால் சமஷ்டி தொடர்பில் தெரியாதவர்களே நாட்டைப் பிரிக்க சதி செய்வதாக கூறுகிறார்கள்.
சமஷ்டி என்பது ஐக்கியம் படுத்துவது என்பதாகும். ஆனால் தெற்கில் உள்ளவர்கள் நாட்டை பிளவுப்படுத்த போகிறோம் என்கிறார்கள். எமக்கு சமஷ்டி ஆட்சியை தர மறுத்தால் அதற்கு பதிலாக என்ன செய்ய முடியும் என்பதை யோசிப்போம்.
மாவீரர் நாள்
மாவீரர் நாளை அனுஷ்டிப்பதை ஒரு பிரச்சினையாக கொள்ள முடியாது. மாவீரர் நாள் என்பது உயிரிழந்த தங்களது உறவுகளின் ஆத்ம சாந்திக்காக அவர்களை நினைவுகூரும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு நினைவு நாளாகவே நாம் கருதுகிறோம்.
ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் மீது உள்ள வைராக்கியம் இதனை வேறு கோணங்களில் பார்க்கத் தூண்டுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உருவாக்கம்
விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாவதற்கு முன்னரே தமிழர்களின் பிரச்சினை இருந்து வந்ததுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையிலேயே விடுதலைப்புலிகள் உருவாகும்நிலை ஏற்பட்டது. இப்போதும் கூட விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகி விடுமோ என்று எண்ணுகின்றவர்கள் வடக்கு மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்று எண்ணவில்லை.
வடக்கு மக்களின் பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படுமாயின் இவ்வாறான எண்ணங்களுக்கு, சிந்தனைகளுக்கும் இடமில்லாமல் போய்விடும்.
சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு
சிறிலங்கா அதிபருடன் இன்று நடத்திய சந்திப்பில் 9 மாகாணங்களினதும் முதலமைச்சர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தச் சந்திப்பின் போது வட மாகாணத்தின் நிதிப் பற்றாக்குறை தொடர்பில் சிறிலங்கா அதிபரிடம்  தெரிவித்தேன்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய அவர் இம்மாத இறுதிக்குள் குறித்த விடயத்துக்கான தீர்வை பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்.
இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்
வடக்கில் உள்ள சிறிலங்கா இராணுவத்தை முற்றாக நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக இரண்டு மடங்கு காவல்துறையினரை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இராணுவத்தினர் வடக்கு மக்களின் காணிகளை தம்வசப்படுத்தியுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் தெற்கில் இடம்பெறுவதில்லை.
அது மாத்திரமின்றி தெற்கில் காவல்துறையின் கட்டுபாட்டில் இருக்கும் எந்த ஒரு பகுதியிலும் அதிகளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதில்லை, குற்றச்செயல்கள் இடம்பெறுவதில்லை. ஆனால் வடக்கில் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் சேவையில் இருந்தும் இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
இதனால் இராணுவத்தினரை முற்றாக நீக்கிவிட்டு, இரண்டு மடங்கு காவல்துறையினரை சேவையில் அமர்த்த வேண்டும்.
ஆவா குழு
ஆவா குழுவின் பின்னணியில் அரசியல்வாதிகளோ, தமிழ் மக்களோ அல்லது இராணுவப் புலனாய்வாளர்களோ இருக்கலாம். ஆராயாமல் எதனையும் நாம் கூற முடியாது. அதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகளின் அடிப்படையிலேயே அதனை கூறமுடியும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களான மருத்துவர் பூ.லக்ஸ்மன், வசந்தராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட மருத்துவர் லக்ஸ்மன், எழுக தமிழ் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-