News Update :

Thursday, April 18, 2019

TamilLetter

உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு அரசியல்…!! புதிய பிரதமராகிறார் சஜித் பிரேமதாஸா…!! அதிரடி நடவடிக்கையில் மைத்திரி…!ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.சமகால அரசியல் நிலவரங்களை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பாரிய அரசியல் மாற்றங்கள் நிகழப்போவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையிலேயே, ஜனாதிபதி நாடு திரும்பியதும் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.


Read More

Monday, April 15, 2019

TamilLetter

அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம?அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், குமார வெல்கமவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியில் நிறுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், சிறிலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அந்தக் கட்சியின் ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.

பொதுவேட்பாளராக குமார வெல்கமவை நிறுத்த வேண்டும் என்றுபொதுஜன பெரமுன தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

விரைவில் கூட்டு எதிரணி தலைவர்கள் இதுபற்றி சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, குமார வெல்கமவும், ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் தான் எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Read More
TamilLetter

பாரிஸ் புகை மண்டலம்! எரிந்து விழுந்தது தேவாலயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் தேவாலயத்தின் கோபுரம் முற்றாக எரிந்து, சரிந்து விழுந்ததுள்ளது.

இன்று திங்கட்கிழமை மாலை ஐந்து முப்பது மணியளவில் கோபுரத்தில் தீ பற்றி எரிந்தது. இத்தீவிபத்தினால் பாரிஸ் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

தீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடியிருந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத் திகழ்ந்த இந்த பழமையான தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டது பாரிஸ் மக்களை மட்டுமன்றி உலக வாழ் கிறிஸ்தவர்களையும் கவலையடைய செய்துள்ளது.

Notre Dame cathedral தேவாயலத்தைப் பார்வையிட ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Read More

Sunday, April 14, 2019

TamilLetter

மாகாணசபை தேர்தல்

 
 
ஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையில் தேர்தலை நடாத்த வேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லாதிருப்பதாக பெப்ரல் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஏழு மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ளது. மேல் மாகாண சபையின் ஆட்சிக் காலமும் இம்மாதம் 20 ஆம் திகதி நிறைவடைகின்றது. மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் சரியாயின் இதுவரையில் நிறைவடைந்திருக்க வேண்டும்.
இருப்பினும், எந்தத் தரப்பினருக்கும் இதற்கான தேவையில்லாது காணப்படுவதாகவும் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திப் போடுவது ஜனநாயக விரோத செயலாகும். தேர்தலை வேண்டி நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலையில், நீதிமன்ற செயற்பாடுகளிலும் நீண்ட காலம் எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது 9 மாகாண சபைகளிலும் 7 மாகாண சபைகள் ஆளுநர்களின் நேரடி அதிகாரத்தின் கீழ் இயங்கி வருகின்றது. மேல் மாகாண சபையும் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் ஆளுநரின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்
Read More
TamilLetter

ஐதேகவை உடைத்து மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு? – தயாராகிறார் மைத்திரிவரும் நொவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஐதேகவின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இதொகாவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி,  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு அளிப்பார்கள் என்றும், சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

கடந்த ஒக்ரோபரில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்ட போது, ஐதேக உறுப்பினர்கள் பலரும் சிறிலங்கா அதிபருக்கு ஆதரவு அளிக்க தயாராக இருந்தனர் என்று ஐதேக மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் ஐதேகவின் அமைச்சர்கள் சிலரை சிறிலங்கா அதிபர் பாராட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More

Wednesday, April 10, 2019

TamilLetter

வழக்கு தொடர்வதற்கான கலந்துரையாடல்அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 27 ஏக்கர் அரச நிலங்களை மீட்பது தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர சபையில் இடம்பெற்றது.


சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பொது விளையாட்டு மைதானத்திற்காக தனியாரிடம் கொள்வனவு செய்யப்பட்ட 7.5 ஏக்கர் காணியை சில தனி நபர்கள் கபளீகரம் செய்த காரணத்தினால் மைதானத்தை விஸ்தரிப்பு செய்ய முடியாமல் இருப்பதுடன் அக்கரைப்பற்றில் பொது நிறுவனங்கள் அமைப்பதற்கான பொதுக் காணிகள் இல்லாத காரணத்தினால் தனிநபர்களினால் அடாத்தாக பிடிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 27 ஏக்கர் காணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அந்த அடிப்படையில் இக்காணிகளை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் தலைமையில் அக்கரைப்பற்று மாநகர சபையில் இடம் பெற்றது.இதில் அக்கரைப்பற்றின் மூத்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவுகளையும் ஆலோசனையையும் வழங்கினர்.

அக்கரைப்பற்றின் பொதுக் காணிகளை மீட்பது ஒவ்வொறு பொது மகனுக்கும் கடமையாகும் என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கிறோம்

Read More
TamilLetter

அரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன?
எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது.
ஆனால் “நாம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அப்படி எந்த நிபந்தனையையும் விதிக்கவும் முடியாது” என்று பெருமையோடு கூறுகிறது கூட்டமைப்பு.
இதைக் கேட்பவர்களுக்கு சிரிப்பு வரும். சற்று ஆழமாக யோசித்தால் தலைசுற்றும்.
இதேபோலத்தான் ஜெனிவாவிலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்தோம் என்று மகிழ்ச்சியடைகிறார் சுமந்திரன்.
இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும். அது தவிர்க்க முடியாத சர்வதேச (மேற்குலக) விதி என்பது எல்லோருக்குமே தெரியும்.
இதையிட்டுக் கூட்டமைப்போ சுமந்திரனோ அல்லது அவர்களுடைய ஆதரவாளர்களோ பெருமைப்படுவதற்கு எதுவுமே இல்லை.
இதைப்போலத்தான் தற்போதைய வரவு செலவுத்திட்டத்துக்கான கூட்டமைப்பின் ஆதரவும். அதைப்போலக் கண்மூடித்தனமாக  ஆதரவளித்ததை நியாயப்படுத்துவதுமாகும்.
இதையெல்லாம் தமிழ் மக்கள் விரும்புகிறார்களா என்றால் அதுவுமில்லை.
அப்படியென்றால் மக்களுக்கு விருப்பமில்லாத விசயங்களை எதற்காகக் கூட்டமைப்புச் செய்ய வேண்டும்?
அல்லது மக்களுடைய விருப்பத்தின்படிதான் இந்த முடிவுகளைக் கூட்டமைப்பு எடுத்ததா?
அல்லது மக்களுடன் எங்கேயாவது இந்த விடயங்களைக் குறித்துக் கூட்டமைப்பு ஆலோசித்திருக்கிறதா?
அல்லது இப்படித்தான் கூட்டமைப்புச் செயற்பட வேண்டும். தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று மக்கள் எங்கேயாவது கூறியிருக்கிறார்களா?
மக்கள் மட்டுமல்ல எவரும் எங்களை எதுவும் கேட்க முடியாது. ஒரு மசிரையும் புடுங்க முடியாது என்ற இறுமாப்புடன் அது அரசுக்குச் சார்பான தீர்மானங்களை எடுக்கிறது. அரசுக்கு ஆதரவை வழங்குகிறது. அரசோடு ஒத்தோடுகிறது. (அப்படியென்றால், முன்னர் அரசோடு இணைந்து செயற்பட்ட ஈ.பி.டி.பியை எப்படிக் கூட்டமைப்பினர் ஒத்தோடிகள் என்று சொல்ல முடியும்?)
ஆகவே சந்தர்ப்பவாதமாக மக்களுக்கு எதிர்நிலையில் நின்று செயற்படுகிறது கூட்டமைப்பு எனலாம்.
எதற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்படிச் செயற்படுகிறது? அதற்கான அவசியம் என்ன? என்று சிலர் கேட்கலாம்.
பச்சையாகவே தெரிகிறது, கூட்டமைப்பு தன்னுடைய நலன்சார்ந்து மட்டுமே செயற்படுகிறது என.
அதாவது கூட்டமைப்பின் பாரா”ளுமன்ற உறுப்பினர்களுடைய நலன்களே இதில் மையம்.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே கட்சியின் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் வைத்திருப்பவர்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் பெருக்கிக் கொள்ளவும் இதையெல்லாம் செய்கிறார்கள்.
கூட்டமைப்பின் அடுத்த மட்டத்திலிருப்போரில் பலருக்குத் தங்கள் தலைமை இப்படிச் செயற்படுவதையிட்டு உள்மனக்கொதிப்புண்டு.
ஆனால், அவர்களால் தலைமையை எதிர்த்து நிற்க முடியாது.
அப்படி எதிர்த்தால் அவர்கள் கட்சியினால் – தலைமையினால்  ஓரங்கட்டப்படுவர். மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தில் கூடச் செல்வாக்கைப் பெற முடியாமல் போய் விடும்.
ஆகவே கட்சியின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமாக இருந்தால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும். கட்சியின் நன்மதிப்பைப் பெற வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த வேணும். அதனுடைய ஏகபோகத்துககுக் கட்டுப்பட்டாக வேண்டும்.
இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், போரினாலும் நீண்டகால ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்ட சமூகமொன்று அந்தப் பாதிப்புகளிலிருந்தும் நீதியின்மையிலிருந்தும் இன்னும் மீட்கப்படாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் அரசியல் தோல்விகளால் மூழ்கடிக்கப்படுகிறது. அதிலும் அந்த மக்கள் நம்பிய தலைமையினாலேயே தோற்கடிக்கப்படுகிறது. இது உண்மையில் பலியிடலாகும்.
காணாமலாக்கப்பட்டோர், காணிகளை இழந்தோர், உறவுகளை இழந்தோர், அரசியல் கைதிகள் என்ற பேரில் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலையாளர்கள், போரிலே பெற்றோரை இழந்தோர், ஆண்துணையை இழந்த பெண்கள், உடல் உறுப்புகளை இழந்தோர் என கூடுதற் பாதிப்புகளைச் சந்தித்தவர்களுக்கு இதுவரையில் முறையான எந்தத் தீர்வும் கிட்டவில்லை. எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவேயில்லை.
இந்த நிலையில் எப்படிக் கண்ணை மூடிக் கொண்டு அரசுக்கு ஆதரவை வழங்கியது கூட்டமைப்பு? அதற்கான அவசியம் என்ன? கூட்டமைப்பு இப்படிச் செயற்படுவதற்கான ஆணையை வழங்கியது யார்?
இந்த விடயங்களில் குறைந்த பட்சமான மீட்பையாவது அரசாங்கத்தைக் கொண்டு கூட்டமைப்பு செய்வித்திருந்தால் இவ்வாறான ஆதரவளிப்புகளுக்கு ஒரு நியாயம் இருக்கும்.
ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
இவை எதையும் செய்யாமலே கூட்டமைப்பின் ஆதரவை (தமிழ் மக்களின் ஆதரவை) அரசாங்கம் பெற்றுள்ளது. இது அரசுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றியே.
அதாவது போர்ப்பாதிப்பை நிவர்த்தி செய்ய வேண்டிய தன்னுடைய பொறுப்பைச் செய்யாமலே பாதிக்கப்பட்ட மக்களின் தலைமையுடைய ஆதரவை அரசாங்கம்  பெற்றுள்ளதென்பது சாதாரணமான விசயமல்ல.
இது பாதிக்கப்பட்ட மக்களைச் சரணாகதி அடைய வைத்த செயற்பாடாகும். ஏறக்குறைய இது இன்னொரு வகையான தோற்கடிப்பே.
இதற்கு முழுமையான “கைவேலை”யைச் செய்து கொடுத்திருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
ஆகவேதான் தமிழ் மக்களின் வரலாற்றில் மாபெரும் தவறுகளைக் கூட்டமைப்பு விட்டுக் கொண்டிருக்கிறது என்கிறோம்.
இன்றுள்ள நிலைமையின்படி குறைந்தபட்சப் பேரம்பேசக்கூடிய வாய்ப்புகளையும் கூட்டமைப்பு குறுகிய சுயநலன்களுக்காகக் கைவிடுகிறது என்பது வரலாற்றுத் தவறாகும்.
எந்த வகையிலும் அரசாங்கங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு எந்த நியாயங்களும் கூட்டமைப்பிடம் இல்லை என்பது வெளிப்படையான விசயம்.
அரசியல் என்பது தாம் பிரதிநிதித்துப்படுத்தும் மக்களுடைய நலன்களுக்கான பணியே தவிர, மக்களை வைத்துத் தமது நலன்களைப் பேணிக்கொள்ளும் விசயமல்ல.
அப்படி ஒரு அரசியல் இருந்தால் நிச்சயமாக அது மக்கள் விரோத அரசியலேயாகும்.
2009 போர் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்கும் அரசியலுரிமைக்குமாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழியப்போகின்றன. இதில் நான்கு ஆண்டுகள் சுத்தமாகவே நடப்பிலுள்ள அரசாங்கத்துக்குப் பகிரங்க ஆதரவைச் சம்மந்தன் அணி வழங்கிக் கொண்டிருக்கிறது.
அப்படி நெருக்கமாக நின்று ஆதரவளித்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு இந்தச் சூழலைப் பயன்படுத்தி இதுவரையில் எவ்வளவோ வேலைகளைச் செய்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை ஈடேற்றியிருக்க முடியும்.
இதற்கென அரசாங்கத்திற்குச் சில வேலைத்திட்டங்களை முன்வைத்திக்கலாம். நிலைமையைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருக்கலாம். புதிய அரசியல் முறைமையை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
சிறப்பான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கலாம்.
பல கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கலாம்.
கூடவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிக் கொண்டிருப்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக இல்லாமல் செய்திருக்கலாம்.
கூட்டமைப்பு அந்தப் பணியைச் செய்யாதபடியால்தானே மக்கள் போராட வேண்டியிருக்கிறது.
எனவே இதொன்றையும் செய்யாமலே அரசுக்கு ஆதரவாகக் கையையும் காலையும் தூக்குவதென்பது மிக அநீதியானது. கேவலமானது. கூட்டமைப்பின் வார்த்தைகளிலேயே சொன்னால் துரோகமானது.
இதையே நாம் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது.
முன்னர் இதே போல அரச ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டமைப்பினர் கடுமையாக விமர்சித்தனர்.
இப்பொழுது அதே வேலையை அவர்களே செய்கின்றனர்.
அப்படியென்றால் இதற்கு என்ன அர்த்தம்? இதற்கு என்ன பெயர்?
மக்களுடைய நியாயங்களுக்கும் நிலைமைகளுக்கும் மாறாகச் செயற்படும் எந்த அரசியல் தரப்பும் நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடித்து நிற்க முடியாது,
அது எவ்வளவு தந்திரங்களைச் செய்தாலும் வெற்றியைப் பெற முடியாது.
இதொன்றும் கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டுப்பத்திரமல்ல. மக்களின் நிலை நின்று நோக்கப்படுவதானால் ஏற்பட்ட வெளிப்பாடு.
சனங்களுக்கான நியாயக் குரல்.
இதை மறுத்துரைப்போரிடம் நாங்கள் சில கேள்விகளை எழுப்பலாம்.
விடுதலைப்புலிகளின் காலத்திலும் அதற்குப் பிறகு 2009 ற்குப்பின்னான இறுதிப் பத்து ஆண்டு காலத்திலும் அரசியல் அரங்கில் கூட்டமைப்பே தலைமைச்சக்தியான நிற்கிறது.
இந்தப் பத்து ஆண்டுகளிலும் அது தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் என்ன?
இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் பெற்ற மாபெரும் நன்மைகள் எவை?
இந்தப் பத்து ஆண்டுகளிலும் கூட்டமைப்பின் அரசியல் சாதனை என்ன? அரசியற் பங்களிப்பு என்ன?
எந்தக் கணக்கெடுப்பும் இல்லாமல், எத்தகைய மதிப்பீடுகளும் இல்லாமல் இப்படியே இந்தப் பயணம் தொடர்வது சரியானதா?
இதையிட்டு இப்போதேனும் பேசவில்லை என்றால் இதையும் விட மோசமான நிலையே நாளை ஏற்படும்.
நாளை என்பது இன்றைய உருவாக்கமே. இன்றைய பாதுகாப்பு. இன்றைய செயற்பாட்டின் விளைவுதானே!
ஆகவே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மதிப்பீடு செய்து, ஆய்வுக்குட்படுத்தியே நாம் அடுத்த கட்டத்தைப்பற்றிச் சிந்திக்க முடியும்.
அதற்கான ஒரு தூண்டலே இந்தக்குறிப்புகள்.
தவறுகளை உரிய வேளையில் சுட்டிக்காட்டவில்லை என்றால், பொறுப்பானவர்களை உரிய சந்தர்ப்பத்தில் நெறிப்படுத்தவில்லை என்றால் அது இன்னொரு முள்ளிவாய்க்கால் போலவே மாறும்.
தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால்களிலிருந்து வெளியேற வேண்டுமே தவிர தொடர்ந்தும் முள்ளிவாய்க்கால்களுக்குள் வீழ்ந்து கொண்டிருக்க முடியாது.
Read More
TamilLetter

வானூர்தி நிலையத்தில் தற்படம் (செல்பி) எடுத்தால் மரணதண்டனை!!தாய்லாந்தில் வானூர்தி நிலையத்தின் முன் தற்படம் (செல்பி) எடுத்தால் மரணதண்டணை வழங்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.

தாய்லாந்து பூக்கெட் மாநிலத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது வானூர்தி நிலையம். மாய்காவோ கடற்கரையோரமாக வானூர்தி தாழப்பறந்து தரையிறங்குவதைப் பார்ப்பதற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவது வழமை.

 சுற்றுலாப் பயணிகள் தாழப் பறக்கும் வானூர்தியுடன் தற்படம் (செல்பி) எடுப்பது வழங்கம். தரையிறங்கும் வானூர்தியில் வானோடியின் கவனம் சிதைவடைவதால் விபத்துகள் நோிடக்கூடும் எனக்கூறி அப்பகுதி மாகாண அரசு தற்படம் எடுக்கத் தடை விதித்துள்ளது.

 தடையை மீறி தற்படம் எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை வழங்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பு சுற்றூலாத்துறையை அதிகம் பாதிக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Read More
TamilLetter

அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விருது சிறுபான்மை சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றிவருகின்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், சமூக அபிவிருத்தி அமைச்சர்  பழனி திகாம்பரம் அவர்களுக்கு
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அமைச்சில் இடம்பெற்ற இந் நிகழ்வில்   சம்மேளனத் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸதீன்,செயலாளர்
ஏ.ஜே.எம்.ஹனீபா ஆகியோர் இன்று அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வைத்தனர்.

Read More

Tuesday, April 9, 2019

TamilLetter

அட்டாளைச்சேனையில் அதாஉல்லாவின் கை ஓங்குகிறது

       

முகம்மட் பரகான்
 
தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அதிகாரத்தில் இருந்த போது கௌரவப்படுத்தாத அட்டாளைச்சேனை பிரதேசம் இன்று எவ்வித அதிகாரமற்ற நிலையில் இருக்கும் அவரை போட்டி போட்டு கௌரவப்படுத்தி வருவது எல்லோரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.

அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அக்கட்சியின் அமைச்சர்கள் உட்பட மாற்று அரசியல் செய்யும் முன்னாள் மாகாண அமைச்சர் ஆகியோர் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தலைமை தாங்கி வரும் நிலையில் இவர்களைத்தாண்டி அதாஉல்லாவை நோக்கி மக்கள் செல்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பிரிவுக்கு பிற்பாடு அப் பிரதேசத்திலிருந்து வெகுவாரியாக மக்கள் அதாஉல்லாவின் கிழக்கு வாசல் நோக்கி பயணிப்பது இப் பிரதேசத்திற்கு தலைமை தாங்கும் அரசியல்வாதிகள் மீது மக்கள் அதிர்ப்தியடைந்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொள்ளும்; நிகழ்வுகளுக்கு இவ் இரண்டு கட்சிகளின் முக்கியஸ்தர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மன விருப்பத்துடன் மேடையேறுவது தேசிய காங்கிரஸின் எதிர்கால வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றும்

Read More

Monday, April 8, 2019

TamilLetter

தமிழ் குடும்பமொன்றில் 3 பேருக்கு நேர்ந்த பரிதாபம்; ஒரு மாவட்டத்தையே உலுக்கிய சோகம்!


தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், விருதுநகர் அருகே உள்ள நீர்த்தேக்க அணையில் மூழ்கியே இவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலும்,

விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை சாலையில் உள்ள செந்திவிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். பருப்பு மில் தொழிலாளி.
இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன்கள் ஹரிகரன் (வயது 14), ஆதிசே‌ஷன் (10) இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.

விருதுநகரில் தற்போது பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக கலைச்செல்வியின் தம்பி சோலைமுருகன் (40) மதுரையில் இருந்து வந்திருந்தார்.

அவர் இன்று காலை மருமகன்கள் 2 பேரையும் அழைத்துக்கொண்டு விருதுநகர் குல்லூர்சந்தை அணைக்கு சென்றார். அங்கு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதனை பார்த்ததும் சோலைமுருகன் உள்பட 3 பேரும் குளிக்க ஆசைப்பட்டனர்.

அதன்படி சோலை முருகன், ஹரிகரன், ஆதிசே‌ஷன் அகியோர் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான இடத்திற்கு சென்றதால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

அவர்களை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சோலை முருகன் உள்பட 3 பேரும் நீரில் மூச்சு திணறி இறந்தனர். அவர்களது உடலையே மீட்க முடிந்தது. பலியான சோலைமுருகன், மதுரையில் பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். சூழக்கரை போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More
TamilLetter

‘மித்ரசக்தி-6’ கூட்டுப் பயிற்சி நிறைவுஇந்திய- சிறிலங்கா இராணுவத்தினருக்கு இடையில் இரண்டு வாரங்களாக நடந்து வந்த ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சி நேற்று நிறைவடைந்தது.
இந்திய – சிறிலங்கா இராணுவத்தினர் ஆண்டு தோறும் நடத்தி வரும் ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சியின் ஆறாவது கட்டம், தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமில் இடம்பெற்று வந்தது.

மார்ச் 26ஆம் நாள் ஆரம்பித்த இந்தக் கூட்டுப் பயிற்சி நேற்று முடிவடைந்தது.
14 நாட்கள் நடந்த இந்தக் கூட்டுப் பயிற்சியில், நகர மற்றும் கிராமப் புறங்களில் பல்வேறு தந்திரோபாய நடவடிக்கைகளை செயற்படுத்துவது தொடர்பான பயிற்சிகளில் இரண்டு நாடுகளின் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் இரண்டு நாடுகளினதும் தலா 120 இராணுவத்தினர் பங்கேற்றனர்.
Read More

Sunday, April 7, 2019

TamilLetter

கோத்தாவுக்கு ஆப்பு; ஷிராந்தி தான் ஜனாதிபதி வேட்பாளர்!ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டால், மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்து விடும் என்றும், எனவே ஷிராந்தி ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும், மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கோத்தா அரசியலுக்குள் வந்தால் மஹிந்தவின் அரசியலில் தளம்பல் ஏற்பட்டு அதன் பின்னர் அரசியல் கேந்திர நிலையமாக கோத்தாபய ராஜபக்ஷ மாறிவிடுவார், இதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாவை ஒரு சமயம் தூக்கி வைத்திருக்கிறார். அதன் பின்னர் கீழே எறிகின்றார் .

 எனவேதான் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாவை வேட்பாளராக நிறுத்த போவதில்லை. அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

கோத்தாவை வேட்பாளராக நிறுத்த எவரெவர் முயற்சிகளை மேற்கொண்டாலும் ஷிராந்தி ராஜபக்ஷஷவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் கூறினார். 
Read More
TamilLetter

இம்மாத இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் தீர்மானிக்கப்படா விடின், அடுத்த வருடமே தேர்தல்!


வழமையான விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் தயாராகவே உள்ளதாக  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பழைய முறையில் நடத்துவதாக இருந்தாலும் சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். இது இலகுவான காரியமாகும். இம்மாத இறுதிக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது போனால் அடுத்த வருடத்திலேயே மாகாணசபை தேர்தலை நடத்தமுடியும்.

மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில்தான் நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட சில கட்சிகள் பிடிவாதமாக இருந்தமையால் தான் உரிய காலத்தில் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த முறையிலாவது தேர்தலை நடாத்துமாறும் எந்த முறையில் நடாத்தினாலும் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ தரப்பு ஆரம்பம் முதல் தெரிவித்தே வருகின்றது.

தேர்தலை நடாத்துமாறு அனைத்து தரப்பினரும் கோரி வருகின்ற போதிலும் தேர்தல் மட்டும் ஏன் நடைபெறாமல் இருக்கின்றது என்பது மட்டும் பொது மக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
Read More
TamilLetter

முன்னாள் போராளிகளுடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் பேச்சுஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கடந்த வாரம், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள் விவகாரங்களைக் கையாளும் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்ரினா ஜேம்ஸ் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, புனர்வாழ்வுக்குப் பின்னர் தாங்கள் விடுதலை செய்யப்பட்ட போதும்,  இராணுவத்தின் கண்காணிப்புக்குள்ளேயே இருந்து வருவதாக  முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
தமது அரசியல் செயற்பாடுகளுக்கு இராணுவத்தின் தலையீடுகளால் தடை ஏற்படுவதாகவும், அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இராணுவத் தலையீடுகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முறையிட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், இராணுவத்தின் கண்காணிப்புக்குள் இருப்பதால் மக்கள் தம்மைத் தொடர்ந்தும் சந்தேகிக்கின்ற நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள் விவகாரங்களைக் கையாளும் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்ரினா ஜேம்ஸ், ஜனநாயக அடிப்படையிலான தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகள் தான் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு மூலமே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தாம் அமெரிக்க குழுவிடம் கூறியதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ள  கிறிஸ்ரினா ஜேம்ஸ், தீவிரவாத எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் ஆயுதக் குழுக்களை பிரதான அரசியல் வழிமுறைக்கு கொண்டு வரும் சிறப்பு நிபுணராவார்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதரக அரசியல் விவகாரப் பிரிவைச் சேர்ந்த ஜோன் ரூதரும் பங்கேற்றிருந்தார்.
Read More